புதுக்கோட்டை திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக சுவரொட்டிகள் : திமுக கட்சி தலைமை அதிர்ச்சி

புதுக்கோட்டை  திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக சுவரொட்டிகள் : திமுக கட்சி தலைமை அதிர்ச்சி

சனி, மார்ச் 19,2016,

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விதவிதமான குற்றச்சாட்டுகளுடன் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் திமுக கட்சி தலைமையை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், இதேபோல பல்வேறு பதவிகளுக்கு கட்சியினரிடம் மாவட்ட நிர்வாகி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், பணத்தை வாங்கிய அவர், குறிப்பிட்டபடி பதவியை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, அதை கிண்டல் செய்வதுபோல சுவரொட்டி மற்றும் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும் அவை பரவி வருகின்றன.

இதேபோல, மற்றொரு தரப்பினர் ஒட்டியுள்ள சுவரொட்டியில், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் தோல்வி ஏற்படக் காரணமான, திமுகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சருக்கு புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவை குறித்து அக்கட்சியினர் கூறும்போது, “திமுகவில் முக்கிய பதவி வகித்த இருவர், கடந்த தேர்தல்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் வேலைகளில் ஈடுபட்டதால், இருவருமே தோல்வியைத் தழுவினர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், திமுகவுக்குள் மீண்டும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது” என்றனர்.