புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் : முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி

புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் : முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி

செவ்வாய், ஏப்ரல் 26,2016,

புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து தரப்படும். தமிழக நலத் திட்டங்கள் புதுச்சேரியிலும் அமல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

மக்களுக்கும் கூட்டணி தர்மத்துக்கும் துரோகம் இழைத்த கட்சி என்.ஆர்.காங்கிரஸ் என்றும், ஊழல் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ்-திமுக என்றும் அவர் சாடினார்.
 புதுச்சேரி, உப்பளம், பழைய துறைமுக மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:
 நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வதில் எங்களுக்கு அனுபவம், திறமை உண்டு. மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் வளர்ச்சி, திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறிய யூனியனான புதுச்சேரியை வளர்ச்சி பெறச் செய்வதில் எங்களுக்கு நிகர் வேறு யார்?
 புதுச்சேரிக்கு நிதிச் சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும். கடன் நிலுவை ரூ.6,400 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். அவர்களுக்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 30 நாள்களில் தரப்படும். தமிழகம் போல புதுச்சேரியிலும் உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.
 கல்வி மேம்பாட்டுத் திட்டம்: தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் கல்வித் துறை மேம்பாடு அடைய செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்படும். விலையில்லா எழுது பொருள்கள், புத்தகங்கள், சீருடைகள், பைகள், காலணிகள் அனைத்தும் வழங்கப்படும்.
 சமூக பாதுகாப்புத் திட்டங்கள்: தமிழகம் போல அனைத்து சமூக நலத்திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படும். விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும். டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலியுடன், ரூ.50ஆயிரம் திருமண நிதி உதவி அளிக்கப்படும்.

காரைக்கால் முழுவதும் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப்படும். காரைக்காலில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தொழில் வளாகம் ஏற்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்றவை வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா  பேசினார்.