புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

செவ்வாய், ஏப்ரல் 26,2016,

கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, புதுச்சேரி மாநிலத்தையே புதைக்குழிக்குள் தள்ளியவர் ரங்கசாமி என்று புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கி பேசினார்.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுகம் திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் கிரேக்க அறிஞர். இதற்கு காரணம் என்னவென்றால், மாற்றத்தின் மூலமாகத் தான் ஏற்றத்தைக் காண முடியும். மாற்றத்தின் மூலமாகத் தான் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். ஆனால், புதுச்சேரியில் என்ன நடக்கிறது? கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அதில் இருந்து பிரிந்து வந்த இயக்கம் ஆகியவை தான் புதுச்சேரியை ஆண்டு கொண்டிருக்கின்றன. தற்போது புதுச்சேரியை ஆளுகின்ற கட்சியும் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த கட்சி தான். இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை, இவர்களது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து வருகிறார்கள். காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பொதுத் தேர்தலில், எனது தலைமையிலான அ.தி.மு.க. ஓர் அணியாகவும், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஓர் அணியாகவும், காங்கிரஸ்-தி.மு.க. ஓர் அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் ஆட்சியை நீங்கள் பல ஆண்டுகள் பார்த்து இருக்கிறீர்கள். மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் இந்த மாநிலத்திற்காக ஏதாவது நல்லது செய்திருக்கிறார்களா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பிரச்சனையை தீர்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக இங்கு விவசாயமே வீழ்ந்து விட்டது. எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் ஏற்படுத்தப் படாததோடு, இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி மத்தியிலே இருந்த போது, இந்தப் பிரதேசத்திற்கு நிதி சலுகையுடன் கூடிய மாநில அந்தஸ்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததா? அல்லது இந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினுடைய கடன் சுமையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்ததா? எதுவுமே செய்யவில்லை.

தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜெ.ஆர். பவர்ஜென் நிறுவனத்திற்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமையை, மறைமுக முறையில் வழங்கி தங்கள் வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டது தான் மிச்சம். புதுச்சேரியின் வளர்ச்சி புஸ்வாணமாகி விட்டது. இங்கு மட்டுமல்ல. எங்கும் எதையும் செய்யவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே இமாலய ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க.கூட்டணி. விளையாட்டிலேகூட விளையாடியவர்கள் என்றால், அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்.

தற்போது புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியை விட மோசமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சி அப்படித் தான் இருக்கும். காங்கிரஸ் எதிரி என்றால், என்.ஆர்.காங்கிரஸ் துரோகி. 2011-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது, அ.தி.மு.க.,வும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. நான்கேட்டுக் கொண்டதன் பேரில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நீங்களும் வாக்களித்தீர்கள். தேர்தல் முடிந்து பெரும்பான்மை பெறாத சூழ்நிலையில், சுயேட்சையின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தவர் தான் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை குழி தோண்டிப் புதைத்தவர் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதை குழியில் தள்ளி விட்டிருக்கிறார் ரங்கசாமி. இவருடைய ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரி எந்த விதமான வளர்ச்சியையும் அடையவில்லை.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் கொடிகட்டி பறக்கின்றன. இவரால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது. மத்திய அரசை வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ, எந்தக் காரியத்தையும் ரங்கசாமியால் சாதிக்க முடியாது.அதற்குரிய தகுதி அருகதை என்,ஆர்.காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. நம்பிக்கை துரோகம் செய்வது என்பது ரங்கசாமிக்கு கை வந்த கலை. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறார் ரங்கசாமி. உங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் திரு. ரங்கசாமி நிறைவேற்றவில்லை என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் சரி, என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் சரி, உங்கள் பிரச்சனையை மையப்படுத்தி போராட்டங்கள் நடத்திய ஒரே இயக்கம் அதிமுக என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தி.மு.க. இருந்த போதும் சரி, காங்கிரஸ் இருந்த போதும் சரி, அவர்கள் எல்லாம் எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை. பெயருக்கு எதிர்த்ததோடு சரி. மற்றபடி ஆளும் கட்சியின் கைப்பாவைகள் தான் தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக, தொடர்ந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க.,தான் என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட போதும் சரி, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் சரி, வெள்ள நிவாரணத்தை அளிக்காத போதும் சரி, ஏழை எளிய மக்களின் விவசாய நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்த முயன்ற போதும் சரி, காமராஜர் வீடு கட்டும் திட்டத்திற்கான மானியத்தை உயர்த்தாத போதும் சரி, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை பெறாத போதும் சரி, உங்கள் நலனுக்காக, உங்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் அ.தி.மு.க.,தான். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  பேசினார்.