புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆறுதல்

புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  ஆறுதல்

வியாழன் , டிசம்பர் 15,2016,

சென்னை ; 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நேற்று பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘வார்தா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக அரசு விரைந்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.
எனினும் பூங்காவில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 950 மீட்டர் நீளத்திற்கு பூங்காவின் வெளிப்புற பாதுகாப்புச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. விலங்குகள் இருப்பிட நிழற்கூரைகள், பார்வையாளர் ஓய்விடங்கள், இருக்கைகள் போன்றவை சேதமடைந்துள்ளன. குடிநீர் குழாய்கள், இணைப்புக் குழாய்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன.
மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் வினியோக அறைகள், இணைப்புச் சாலைகள், குடியிருப்புக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சீரமைப்புப் பணிகளை விரைந்து செய்திட வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
 
43 பேருக்கு நிவாரணம்
வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கத்தில் 250 கிலோ வாட் மின்மாற்றி கீழே விழுந்து சேதமடைந்துள்ளதை முதல்வர் பார்வையிட்டார். சேதமடைந்த மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் சீர்செய்வதை பார்வையிட்டு அவர்களின் பணியை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு நிவாரணத் தொகையாக 13 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சருக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, இயற்கை பேரிடர் மேலாண்மை செயலர் ராஜாராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எம்.கோதண்டபாணி ஆகியோர் எடுத்து கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், சரோஜா, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.