புயல் பாதிப்பு,ரூ.22,573 கோடி நிதி தேவை : பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் மனு

புயல் பாதிப்பு,ரூ.22,573 கோடி நிதி தேவை : பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் மனு

செவ்வாய், டிசம்பர் 20,2016,

புதுடெல்லி ; தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்றும் வர்தா புயல் நிவாரணப்பணிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 573 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கவேண்டும் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

புயல் பாதிப்பு  நிவாரணம் உள்பட தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
திங்கள்கிழமை தில்லி சென்றார். மாலை 5.10 மணிக்கு பிரதமரின் இல்லத்தில் பிரதமரைச் சந்தித்தார் முதல்வர். அப்போது, 141 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார்.

அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை உள்பட வட மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரிவாக விளக்கினார். புயல் காரணமாக, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் அதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.
மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் மிகக் குறைவாக இருந்ததாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்பு-நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.
ரூ.22,573 கோடி நிவாரண நிதி: புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யவும், மீட்பு-நிவாரணப் பணிகளுக்காகவும் ரூ.22 ஆயிரத்து 573 கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க வேண்டுமெனவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அமைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேசிய பேரிடர் மீட்பு நிதியம் உள்பட இதர மத்திய திட்டங்களில் இருந்து தமிழகத்துக்கு விரைந்து நிதியை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதன்மூலம், இப்போது நடைபெற்று வரும் மீட்பு-நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும் என அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

தமிழகத்தின் நலன் சார்ந்த 29 மிக முக்கியப் பிரச்னைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றும் குழுவை அமைப்பது, முல்லைப் பெரியாறு நதிப் பிரச்னை, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் போன்ற அனைத்துப் பிரச்னைகள் தொடர்பாக பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பன்னீர்செல்வம் கொடுத்தார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், புயல் நிவாரண பணிகளுக்கு ரூ. 22 ஆயிரத்து 573 கோடி கேட்டேன். உடனடியாக ரூ. 1000 கோடி தருமாறு கேட்டுக்கொண்டேன்.  மேலும், மறைந்த முதல்வருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.