பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்ற கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்ற  கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

வியாழன் , ஏப்ரல் 21,2016,

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா சூடான பதிலடி கொடுத்துள்ளார். சேலம் கூத்தாடிபாளையத்தில் நேற்று நடந்த பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி அவர் பேசியதாவது,

பெண்களைப் பாதுகாப்பதில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துவதால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ் நாட்டில் குறைவாகவே உள்ளன. பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டம் ஒன்றை  2014-ஆம் ஆண்டு எனது அரசு இயற்றியுள்ளது.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பட்டால் தான் அவர்கள்  தங்களின் தலையெழுத்தை மட்டுமன்றி மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும் என்பதால், உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை 1994-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இயற்றியது.   அந்த அடிப்படையிலேயே, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு பதவிகளை பெண்கள் பெற முடிந்தது.  இந்த இட ஒதுக்கீட்டை  50 சதவீதமாக உயர்த்தி ஒரு சட்டத்தை எனது அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. 

கருணாநிதியைப் பொறுத்தவரை எதையுமே தேர்தல் கண்ணோட்டத்துடன் தான் பார்த்து பழக்கப்பட்டவர். எனவே தான் இந்த இட ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்கு என்பதிலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது, வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காகத் தான் என கருணாநிதி கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் என கூசாமல் பொய் சொல்லியுள்ளார்.  கருணாநிதி.    1994-ஆம் ஆண்டு எனது ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தினால் தான், 1996-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.

  மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தச் சட்டம் ஏன் இயற்றப்படவில்லை எனக் கேட்டு தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் கருணாநிதி.   இந்த சட்டம் கடந்த 5 ஆண்டுகளில் எப்போது  இயற்றப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு 2016-ல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலின் போது தான் நடைமுறைக்கு வர இயலும்.  பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சட்டத்தை இந்த ஐந்தாண்டுகளில் முன்பே ஏன் இயற்றவில்லை என்று  கருணாநிதி அறிவுப்பூர்வமாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். 

கடந்த ஐந்தாண்டுகளில் எப்போது நிறைவேற்றி இருந்தாலும் இந்தச் சட்டத்தை, வர இருக்கின்ற 2016-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது தானே இதை நடைமுறைப்படுத்த முடியும். சென்ற ஆண்டு இயற்றப்பட்டிருந்தாலும், இது வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தான் நடைமுறைப்படுத்த இயலும்.  இது கருணாநிதிக்கு தெரியவில்லை என்றால், எந்த சட்டம் எப்போது செயல்படுத்த இயலும் என்பதை அது பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் பின்பு அவர் அறிக்கைகள் வெளியிடட்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.