பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

வெள்ளி, ஜூலை 22,2016,

சென்னை – பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது,

உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காகவும், அவை சுய சார்புடைய அமைப்புகளாக செயல்படுவதற்காகவும், மாநிலத்தின் சொந்தவரி வருவாயிலிருந்து அவற்றிற்கு மானியமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. நான்காவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் சொந்த வரிவருவாயிலிருந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடப்பு நிதியாண்டில் பகிர்ந்தளிப்பதற்காக முறையே, 4,995.66 கோடி ரூபாயும், 3,617.55 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பதினான்காவது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, நமது மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுவான அடிப்படை நிதியுதவியாக 2,406.14 கோடி ரூபாயும், பொதுவான செயல்பாட்டு நிதியுதவியாக 494.99 கோடி ரூபாயும் நடப்பு நிதி ஆண்டில் கிடைக்கும். 2016–2017-ம் ஆண்டிற்கு, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக 11,514.34 கோடி ரூபாய் நிதிக்குழுக்களின் நிதியுதவியாகக் கிடைக்கும்.

இது கடந்த ஆண்டைவிட 2,163.24 கோடி ரூபாய் அதிகமாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி, முதலமைச்சர் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். 2016–2017–ம் ஆண்டுக்கான திருத்த வரவு–செலவுத்திட்ட மதிப்பீடுகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக 183.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.