பெருமழையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை

பெருமழையைச் சமாளிக்க சென்னை  மாநகராட்சி தீவிர நடவடிக்கை

புதன், மே 18,2016,

சென்னை மாநகரில் பெரும் மழையைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, சென்னைக்கும், ஆந்திரத்துக்கும் இடையே வியாழன் காலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பி. சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
 தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, வெளியேற்றுவதற்கு மோட்டார் பம்ப் செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
 மழைநீர் தேங்கும் ஜபார்கான்பேட்டை, கோட்டூர்புரம், மனப்பாக்கம், வேளச்சேரி ராம்நகர் ஆகிய பகுதிகளுக்கு 25 படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 மீட்புப் பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.
 பாதிக்கப்படுபவர்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சி, காவல், தீயனைப்பு-மீட்புத் துறை அலுவலர்கள், சென்னை குடிநீர் வழங்கல்-கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்கள், தேசிய பேரீடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
 அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பின் 6 குழுவினர் சென்னைக்கு 24 படகுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து, காவல் துறை, மின்சார வாரியம் ஆகியவற்றை சார்ந்த அலுவலர்கள் 24 மணி நேரமும் சிறப்புப் பணியாக மாநகராட்சி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளும் கண்காணிக்கப்படுகின்றன.
 மரங்களை வெட்டி அப்புறப்படுவதற்கு வசதியாக மின் அறுவை இயந்திரங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் 3 வழங்கப்பட்டுள்ளன.
 நிவாரண மையங்கள் அமைக்கவும், உணவு தயாரிப்பதற்கும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. நீர் வழிப்பாதைகளில் தங்கு தடையின்றி மழைநீர் வெளியேறுவது கண்காணிக்கப்படுகிறது என்றனர்.