சபாநாயகர் தனபால்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சபாநாயகர் தனபால்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு  முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சனி, ஜூன் 04,2016,

சென்னை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ப.தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க வெற்றி பெற்றது. கடந்த 23–ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் 25–ம் தேதி சட்டசபை கூடியது.  அன்று முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அனைவரும் தற்காலிக சபாநாயகர் செம்மலை  முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து  சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 3–ம் தேதி நடைபெறும் என்று செம்மலை அறிவித்தார். சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகிய இருவரையும் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்தார். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று சட்டசபை காலை 10 மணிக்கு கூடியது. அதன்பின், தற்காலிக சபாநாயகர் செம்மலை திருக்குறளை படித்து  அதற்கான கருத்தையும் சொன்னார். பின்னர் சபாநாயகர் பதவிக்கு ப.தனபால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை செம்மலை அறிவித்தார். சபாநாயகர் பதவிக்கு ப.தனபால் நியமனம் செய்யப்பட்டார் என்றும், அவரது வேட்புமனுவை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்திருந்தார். அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார் என்றார். பேரவை தலைவராக ப.தனபால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இத்துடன்  எனது பணியை நிறைவு செய்கிறேன் என்று தற்காலிக சபாநாயகர் செம்மலை தெரிவித்தார்.

இதற்கான  அரிய வாய்ப்பை வழங்கிய முதல்வர் அம்மாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து  கொள்கிறேன் என்றும் இப்போது சபாநாயகரை மரபுப்படி, அவரது இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். பேரவை தலைவரை சட்டசபை முன்னவரும், சட்டமன்ற தி.மு.க. தலைவரும் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரச் செய்ய வேண்டும் என்றும், அவர் இருக்கையில் அமரும் நேரத்தில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் தற்காலிக சபாநாயகர் செம்மலை கேட்டுக்கொண்டார்.

அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒழுங்கு பிரச்சினை என்று கூறி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தி.மு.க. தலைவர் என்று அறிவித்தீர்கள். அவர் எதிர்க்கட்சி தலைவர். எனவே அப்படித்தானே அழைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை, ‘‘சபாநாயகர்தான் அதனை அறிவிப்பார்’’ என்று விளக்கம் அளித்தார். பின்னர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தனபாலை அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அப்போது 10.04 மணி. இதன்பின் சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்து பேசினார்.

வரலாற்று வெற்றி பெற்று 6–வது முறையாக முதல்வராக பதவி ஏற்று சாதனை படைத்த முதல்வர் அம்மாவை வரவேற்கிறேன். 15–வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று சபாநாயகர் கூறினார்.

இதன்பின் துணை சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக பொள்ளாச்சி வி.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவித்தார். துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெயரை முதல்வர் அம்மா முன்மொழிந்திருந்தார். அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சபாநாயகர் அறிவித்தார்.

அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள். இதன் பின் சபாநாயகர், துணை சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா, அவை முன்னவர்  அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முஸ்லிம் லீக் தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து சபாநாயகர் ப.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேசினார்கள்.

பின்னர் சபையை 16–ம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை முடிந்ததும் சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்கள் இருவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றார்கள்.