பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 29,2015,

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு 486 கோடியே, 36 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் ஜெயலலிதா, 5 குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாயத்தை அடுத்து, கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது – கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது;

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது;

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம், தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல், பாலிகாட் சேலைகளை வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

2016-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், 1 கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கென முதலமைச்சர் ஜெயலலிதா, 486 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

பொங்கல் திருநாளையொட்டி, இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில், 5 குடும்பங்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுலஇந்திரா, வருவாய்த்துறை அமைச்சர் திரு.R.B. உதயகுமார், அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையரும், முதன்மை செயலாளருமான திரு. அதுல்ய மிஸ்ரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், வருவாய்த்துறைச் செயலாளர் திரு. இரா. வெங்கடேசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து வேட்டி-சேலைகளைப் பெற்றுக்கொண்டவர்கள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.