பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

வரும் பொதுபட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி உதவி குறைக்கப்பட்டிருப்பதால் மாநில அரசு அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். நிதி பகிர்வினால் ‌ஏற்படும் பாதிப்பை சரி செய்வதற்காக, நடப்பு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைக்காக ஆய்வு செய்து அளிக்கப்பட்ட முதல் அறிக்கையின் படி 8 ஆயிரத்து 481 கோடி ரூபாயும், துணை ஆய்வறிக்கையின் படி 17 ஆயிரத்து 432 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என மாநில நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டித் தருவதற்கான நிதியும் அளிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணார்பேட்டையில் இருந்து திருவெற்றியூர் வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என மாநில நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.