போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தோடு சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத் தமிழக அரசு திட்டம்

போக்குவரத்து நெரிசலை  குறைக்கும் நோக்கத்தோடு சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத் தமிழக அரசு திட்டம்

செவ்வாய், மார்ச் 08,2016,

சென்னையில் 96.7 கி.மீ. தொலைவுக்கு மாநகரப் பேருந்துகளுக்கென தனிப் பாதைகளை ஏற்படுத்துவதற்கான விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநகரப் பேருந்துகளுடன் தனியார் வாகனங்களும் செல்வதால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விரைவாகச் செல்லவும் மாநகரப் பேருந்துகளுக்கென்று தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் தனிப் பாதையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தத் தனிப் பாதைகளில் பேருந்துகளை இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அதாவது, தற்போது இருப்பதைவிட 50 சதவீதம் அளவுக்கு நேரம் விரயமாவது தடுக்கப்படும். அதேநேரத்தில், நெரிசலால் ஏற்படும் விபத்துகள் குறைவதோடு, அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு ரூ.4.50 கோடியாகும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்றுள்ள நிறுவனங்களைத் தெரிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, 7 வழித்தடங்களில் பேருந்துகளுக்கான தனிப் பாதைத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றனர் அவர்கள்.