மகாவீர் ஜெயந்தி : முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி : முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , ஏப்ரல் 18,2016,

பகவான் மகாவீரர் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரர் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர், பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையே அறம் என விளக்கி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைபிடித்து, அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி வாழ்ந்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்வில் அமைதியும், இன்பமும் என்றும் தழைத்தோங்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மனித குலத்திற்கு மாமருந்தாய் விளங்கும் பகவான் மகாவீரரின் அறவுரைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.