மக்களவையில் முதலமைச்சரை பாராட்டிப் பேசிவிட்டு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு பியூஷ் கோயல் பேசியிருப்பது நாலாந்திர அரசியல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் கண்டனம்

மக்களவையில் முதலமைச்சரை பாராட்டிப் பேசிவிட்டு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு பியூஷ் கோயல்  பேசியிருப்பது நாலாந்திர அரசியல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் கண்டனம்

புதன், மார்ச் 30,2016,

காற்றாலை மின்சாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் திரு. நத்தம் R. விஸ்வநாதன், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAY திட்டம், மக்களுக்கு பயனுள்ள திட்டம் அல்ல என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான கருத்து என்று குறிப்பிட்டுள்ளதுடன், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். தமிழக அரசை குறை கூறும் எதிர்க்கட்சிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணங்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின்  கருத்தை ஏற்றுக்கொள்கின்றனரா என்றும் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்  வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காற்றாலை மின்சாரம் தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னிலை மறந்து, தனது பதவியின் மதிப்பையும் துறந்து, அரசியல் காரணங்களுக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததோடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னமும் கையொப்பம் இடவில்லை என தமிழக அரசை சாடியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடிய திட்டம் தானா என்றால், இல்லை என்பதே அதற்கு ஆணித்தரமான பதிலாக அமையும். ‘மக்களுக்காகவே திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்பதே முதல்வர் ஜெயலலிதா ஆணித்தரமான கருத்தாகும்.

உதய் திட்டம் எந்த அடிப்படையிலே வகுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் இந்த திட்டம் ஏன் தமிழ்நாட்டிற்கு பயன் அளிக்காது என்பது எவருக்கும் எளிதில் புரிந்து விடும். அனைத்திந்திய அளவில் ஒரு புறம் மிக அதிக அளவிலான மின்உற்பத்தித் திறன் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் மின் பற்றாக்குறையும், மின்வெட்டும் பல மாநிலங்களில் உள்ளன. சுமார் 75,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இதற்குக் காரணம் பல்வேறு மாநிலங்களின் மின்பகிர்மானக் கழகங்களால் மின்சாரத்தை வாங்க இயலவில்லை. ஏனெனில், பெரும்பாலான மின் பகிர்மான கழகங்கள் பெரும் நஷ்டத்திலேயே இயங்கி வருவதால் அவைகளால் மின்சாரம் வாங்க இயலவில்லை. மேலும், வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் தவணைத் தொகை ஆகியவற்றையும் செலுத்த இயலவில்லை. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை அவர்களால் திரும்ப செலுத்த இயலவில்லை. ஏனெனில் அவர்களின் மின்நிலையங்கள் குறைந்த செயல் திறனிலேயே (பி.எல்.எப்)செயல்படுகின்றன. எனவே வங்கிகள் கடனாக வழங்கிய தொகை செயல்படாத சொத்தாக, அதாவது (என்.எப்.ஏ) என்று வகைபாடு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின்பகிர்மான கழகங்களின் கடன்களை மாநில அரசு எடுத்துக் கொண்டால், அதிக கடன்பெறும் தகுதியினை மின்பகிர்மான கழகங்கள் பெற்று, அதன் காரணமாக தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்ய இயலும். அவ்வாறு செய்யும் போது தனியார் மின் நிலையங்களின் (பி.எல்.எப்) உயர்கின்ற காரணத்தினால் அவர்கள் லாபம் ஈட்டி வங்கிக் கடன்களை திரும்ப செலுத்த இயலும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை.

இதன்காரணமாக இந்த திட்டத்தின் மூலம் உண்மையான பயன் பெறுபவர்கள் தனியார் மின்நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் ஆகியவைகள் தான். மாநில அரசுக்கோ, நுகர்வோருக்கோ இதில் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை. இந்ததிட்டம்,”நீ அவலைக் கொண்டு வா, நான் உமியைக் கொண்டு வருகிறேன். இருவரும் சேர்ந்து ஊதி ஊதி அவலை சாப்பிடலாம்” என மத்திய அரசு, மாநில அரசுக்கு தெரிவிப்பது போலத்தான் உள்ளது. இந்த திட்டம் ஒரு தலைபட்சமாக அமையாமல், தனியாருக்கும், வங்கிகளுக்கும் லாபம், மாநில அரசுக்கும், மாநில மக்களுக்கும் நஷ்டம் என்ற அடிப்படையில் இல்லாமல், அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை 23.10.2015 அன்றே எழுதியுள்ளார்.

இந்த கடிதத்திற்கு எந்தவித பதில் கடிதம் அனுப்ப இயலாத மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அநாகரிகமான முறையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மின்பகிர்மான கழகங்களின் நிதிசீரமைப்பு தொடர்பாக மத்திய மின்துறையின் கூடுதல் செயலாளரின் 9.9.2015 நாளிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையிலும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து விவாதிக்க எனது தலைமையில் ஒரு குழு அமைத்து  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த குழுவில் தலைமைச் செயலர் மு.ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலர் / நிதி மு.சண்முகம், அப்போதைய மின்துறை செயலர் ராஜேஷ்லக்கோனி மற்றும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மின்சார வாரியம், ஆ.சாய்குமார்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு 9.10.2015 அன்று இந்த உதய் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் விவாதித்தது.

அ) உதய் திட்டத்தின்படி மின் பகிர்மான கழகத்தில் 30.9.2015 நிலவரப்படி உள்ள கடனில் 75 விழுக்காட்டை மாநிலஅரசு இரண்டு ஆண்டுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் ஆண்டில் 50 சதவீதக் கடன், இரண்டாம் ஆண்டில் 25 சதவீதக் கடன் மாநில அரசால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஆ) மேற்கண்ட கடன் தொகை மாநில அரசின் நிதி பத்திரங்களாக வெளியிடப்பட்டுமாநில அரசின் கடனாக மாற்றப்படும். இந்த நிதிப் பத்திரங்களை வங்கிகள் வாங்கும். அதாவது, இதன் பொருள் என்னவென்றால், வங்கிகள் மாநில அரசுக்கு கடன்வழங்கி தங்களுடைய என்.பி.ஏ கணக்குகளை நேர் செய்து விடும்.

இ) இந்த கடன்கள் மின் பகிர்மான கழகத்திற்கு மானியமாக 5 ஆண்டுகளில் மாநிலஅரசுகளால் வழங்கப்பட வேண்டும்.

ஈ) நிதிபற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தளர்வு செய்யப்படும். அதாவது, 2016-17-ம் ஆண்டு முடிய மட்டுமே இந்த தளர்வு நடைமுறைப் படுத்தப்படும்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரிவாக விவாதித்து, அதன் அடிப்படையில் 23.10.2015 அன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2011-ம் ஆண்டு முதல் மின்வாரியத்திற்கு பங்கு மூலதனம், கடன்கள், மின் மானியம், நிதிசீரமைப்பு திட்டத்தின்படி நிதி பத்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் கீழ் 53,328 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது பற்றியும் மேலும் மின்வாரியம் கடன் பெறுவதற்கு ஏதுவாக 46,000 கோடி ரூபாய் அளவில் அரசு ஈட்டுறுதி வழங்கியுள்ளது பற்றியும் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மின்தொகுப்பில் 7485.50 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக சேர்க்கப்பட்டதன் காரணமாக அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவேதான், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் 2010-11-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 2 ரூபாய் 41 காசு என்ற அளவில் ஏற்பட்ட இழப்பு தற்போது 1 ரூபாய் 9 காசாக குறைக்கப்பட்டுள்ளது. உதய் திட்டம் ஒரு பயனுள்ள திட்டமாக இல்லாவிட்டாலும், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவிக்காமல், இதனை எவ்வாறு மாற்றியமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்து அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மின்வாரியம் வங்கிகளிலிருந்து பெற்றுள்ள 17,500 கோடி ரூபாய் கடனை முதற்கட்டமாக மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்து அதற்கு மத்தியஅரசு வழங்க வேண்டிய சில சலுகைகள் பற்றியும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மாநிலஅரசு பின்வரும் சலுகைகளை வழங்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

அ) மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் கடன்களின் அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்தும் காலங்களில் (15 ஆண்டுகளுக்கு எப்.ஆர்.பி.எம்.)கட்டுப்பாடுகளைத் தளர்த்தவேண்டும்.

ஆ) மாநில அரசு 15 ஆண்டுக்கால நிதி பத்திரங்களை (விடுமுறை காலம் 5ஆண்டுகள் உள்ளடக்கி) வெளியிடவும் மற்றும் மாநில அரசு நிதி பத்திரத்தின் வட்டிதொகையை விட 20 அடிப்படை புள்ளிக்கு மிகாமல் வெளியிடவும் மாநில அரசுக்குஅதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இ) முந்தைய மறுசீரமைப்புத் திட்டத்தைப் போலவே இந்த திட்டத்திலும் மாநிலஅரசு எடுத்துக் கொள்ளும் கடன் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும்.

ஈ) எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத நட்டத்தை சமாளிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

உ) எதிர்வரும் ஏழாவது ஊதிய குழுவின் நிதிச் சுமையையும் கணக்கிடும் பொருட்டு இந்த புதிய நிதிசீரமைப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான கால அளவை ஒரு வருடம் என நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் எதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது எனில், அதற்கான காரணம் என்ன என்பதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ஒவ்வொரு மாநிலமாக சென்று அந்தந்த முதலமைச்சர்களை சந்திக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு தெரிவித்த கருத்துகளுக்கு பதில் அளிக்க அவருக்கு நேரமில்லை! போகட்டும்! அவரது துறை அதிகாரிகளாவது பதில் கடிதம் அனுப்ப வேண்டுமா? வேண்டாமா?

கடந்த 20.11.2015-ம் நாளில் மத்திய மின்துறையினால் வெளிடப்பட்ட ஆணையில் மாநில அரசுகளால் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் கடன்கள் மட்டும் மாநிலத்தின் நிதி பற்றாக்குறை வரையறைக்கு கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக 4.12.2015 அன்று மத்திய மின் அமைச்சகம் வெளியிட்ட வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின் பகிர்மான நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டும் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் மின்கட்டண மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களை உயர்த்த வழிவகை செய்யும் இந்த உதய் திட்டம் தமிழக மக்களின் நன்மைக்கான திட்டமா? அல்லது தமிழக மக்களை அவதிக்குள்ளாக்கும் திட்டமா?

இந்த உதய் திட்டம் மின் துறை சீரமைப்பு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல் என ஒன்று உண்டு. அதாவது வெளிப்படையாக தெரிவிக்க கூச்சப்படுவதற்கு மாற்று மொழி தெரிவிப்பது என்பதே இதன்பொருள். அதே போன்று தான் மக்கள் வயிற்றில் அடிக்கும் திட்டம் என்று கூறாமல் மின்துறை சீரமைப்பு திட்டம் என இந்த திட்டம் சொல்லப்படுகிறது. இது உண்மையிலேயே அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டம் எனில், எதற்காக மத்திய அமைச்சர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இதற்கு ஆதரவு திரட்ட வேண்டும்?

இந்த திட்டம் தொடர்பாக மத்திய செய்தி தொடர்புத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், அதாவது, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்கள் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மின் பகிர்மான கழகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும், சாதாரண மக்களுக்கும் உண்மையிலேயே உதவ வேண்டுமென மத்திய அரசு கருதினால், மாநில மின்சார வாரியங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை குறைத்திருக்க வேண்டும். நிலக்கரியை கொண்டு வருவதற்கான செலவினை குறைத்திருக்க வேண்டும். ஆனால்அவ்வாறு இல்லாமல் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கான பசுமை வரியை டன் ஒன்றுக்கு ரூபாய் 51.50 லிருந்து 400 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக செலவழிக்க வேண்டிய தொகை ஆண்டொன்றுக்கு 1,200 கோடி ரூபாயாகும். மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2.5 சதவீத சுங்க வரியும், 2 சதவீத  கவுண்ட்டர் வைலிங் டியூட்டியும் விதிக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலவிடும் தொகை 350 கோடிரூபாய். நிலக்கரி கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆண்டொன்றிற்கு 225 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக செலவிடுகிறது. இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்திநிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 1 எம்.எம்.பி, டி.யூ எரிவாயுவின் விலையை 4.2 அமெரிக்கா டாலரில் இருந்து 5.05 யூ.எஸ். டாலர் என்ற விலையாக உயர்த்தியுள்ளது. இவ்வாறு விலை உயர்த்துவது தான் மின் துறை சீரமைப்பா?

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆர்.இ.சி., பி.எப்.சி போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து கடன் பெறுகிறது. இந்த மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் வரி விலக்களிக்கப்பட்ட அதாவது, டாக்ஸ் பிரீ பாண்டு கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இவற்றுக்கு அவை வழங்கும் வட்டி வீதங்கள் 7.5 சதவீதத்திற்கும் குறைவே ஆகும். இதுபோன்று திரட்டப்படும் நிதியை குறைந்த வட்டி வீதத்திற்கு மின்சார வாரியங்களுக்கு வழங்கினாலே இவை கடனிலிருந்து மீண்டுவிட முடியும். அல்லது இது போன்ற வரிவிலக்களிக்கப்பட்ட கடன் பத்திரங்களை மாநில அரசு வெளியிட மத்திய அரசு அனுமதித்தால், குறைந்த வட்டி வீதத்திற்கு கடன் பெற இயலும். அவ்வாறெல்லாம் உதய் திட்டத்தின் மூலம் செய்யாமல்  திட்டத்தின் மூலம் மாநில அரசை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்?

மத்தியஅரசு செய்யூரில் அமைக்க உள்ள 4,000 மெகாவாட் அதி உய்ய அனல் மின்நிலையத்திற்கான நிலத்தை 2013-ம் ஆண்டே தமிழக அரசு வழங்கியுள்ளதே! இந்த திட்டம் இன்னமும் ஏன் துவங்கப்படவே இல்லை என்பதற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் விளக்கம் அளிப்பாரா? நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மையின் கீழ் வரையறைக்கு 2016-2017-ம் ஆண்டு முடிய மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் எவ்வாறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளன என்பதற்கு ராஜஸ்தான் மாநிலமே சிறந்த உதாரணமாகும். சமீபத்தில், பிரதமர் மோடி் மாதம் ஒரு முறை மாநில தலைமைச் செயலாளர்களுடன் வழக்கமாக நடத்தும் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் புதுடெல்லி-மும்பை தொழில் வழித் தடம் இன்னமும் ஏன்துவக்க இயலவில்லை என்ற கேள்விக்கு, ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் தங்களது மாநிலம் உதய் திட்டத்தில் பங்கேற்றுள்ளதால், தனி சரக்கு வழி திட்டத்திற்கு தேவையான செலவினத்தை தங்கள் மாநிலத்தால் மேற்கொள்ள இயலவில்லை என்பதால், இந்த திட்டத்திற்கான நிலம் வாங்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். எனவே தான், இது போன்று எழக்கூடிய பிரச்னைகளை நன்கு உணர்ந்த முதல்வர்  ஜெயலலிதா மத்திய அரசு அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றி தனது கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

19.3.2015 அன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது “மரபு சாரா எரிசக்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக” முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ்கோயல்.  பசுமை எரிசக்தி காரிடார் திட்டத்தின் மூலம் தேசிய பசுமை எரிசக்தி நிதியத்தின் மூலம் ரூ.637 கோடி பெற்றுள்ளது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் இன்று எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்று சொல்லியிருப்பது அப்பட்டமான நாலாந்தர அரசியல் தான் என்பது தெளிவாகும்.

மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள உதய் திட்டம் குறுகிய நோக்கம் கொண்ட திட்டம். தனியார் மின் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே பயன்அளிக்கக்கூடிய திட்டம். இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நிதி பற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறையிலிருந்து விலக்கு அளிப்பதால் பல்லாண்டுகளுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தினையும் மாநில அரசால் மேற்கொள்ள இயலாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகுந்த துன்பதிற்கு உள்ளாவார்கள். எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைகளை எல்லாம் களைந்தால் தான் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க இயலும் என்பதே முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தாகும்.

இந்த திட்டத்தில் பங்கு பெறவில்லை என குறை கூறும் எதிர்கட்சியினர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.