மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்குக்கூடிய, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்குக்கூடிய, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வியாழன் , ஜூன் 02,2016,

ஏழை-எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 57 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 35 காசு என்ற அளவிலும் உயர்த்தி உள்ளன. தற்போது உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நிலவும் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் வழக்கம் போலவே தற்போதும் தெரிவித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் விலை நிர்ணயக் கொள்கை தவறானது என தாம் பல முறை சுட்டிக் காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த தவறான அடிப்படையிலேயே தற்போதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்து தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றன – மேலும், இந்தியாவிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரித்தும் பெட்ரோலியப் பொருட்களை தயாரிக்கின்றனர் – அவ்வாறுள்ள சூழ்நிலையில், உலக சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலையினை அடிப்படையாக வைத்து அவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விலையின் அடிப்படையில் உள்ளூர் விலையை நிர்ணயிப்பது சரியான விலை நிர்ணயம் ஆகாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கு 11 ரூபாய் 77 காசு மற்றும் டீசலுக்கு 13 ரூபாய் 57 காசு என்ற அளவிலும் கலால் வரியை உயர்த்தியுள்ள நிலையில் தற்போதைய விலை உயர்வு சரியானதல்ல – மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது உலக பொருளாதாரத்தில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டே அமைவதாகும் – இந்தியாவில் குறுகிய கால அடிப்படையில் வெளிநாட்டினர் பங்குச் சந்தை, கடன் சந்தை போன்றவைகளில் முதலீடு செய்து, பின்னர் அவற்றை திரும்ப எடுத்துச் செல்வதும் ரூபாயின் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணி ஆகும்- எனவே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது சரியான கொள்கை அல்ல என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும் – அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் – ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும் – எனவே எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டுமென தாம் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.