மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஞாயிறு, மே 22,2016,

சென்னை;நான் என்றும் மக்கள் பக்கம் மக்கள் என்றும் என் பக்கம் தான் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்றும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.விற்கு வழங்கியுள்ளார்கள். நான் என்றும் மக்கள் பக்கம் தான்; மக்கள் என்றும் என் பக்கம் தான் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. எனது தலைமையிலான அ.தி.மு.க. மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி.

தி.மு.க. ஊடகங்கள் வாயிலாகவும், பிரசாரங்கள் மூலமும் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து விட்டனர். அவர்களது பொய் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கங்களை அளித்தாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், கோயபல்ஸ் பாணியில் தாங்கள் சொன்ன பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. பற்றி கற்பனை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், இவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

தமிழக மக்களை, அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்களை காக்கும் இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் தான் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளார்கள். தேர்தல் நடைபெற்ற 232 சட்டமன்ற தொகுதிகளில் 134 இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். என் மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே சொல்லியதைப்போல தமிழக மக்கள்பால் எனக்குள்ள நன்றியுணர்வை வெளிப்படுத்த அகராதியில் போதிய வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் நலனுக்காக நான் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி

தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனது அருமை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.