மசூதிகள்,கிறிஸ்தவ தேவாலயங்களை,சீரமைக்க ரூ.4 கோடி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மசூதிகள்,கிறிஸ்தவ தேவாலயங்களை,சீரமைக்க ரூ.4 கோடி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , செப்டம்பர் 19,2016,

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்களை மேம்படுத்த ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்கென மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தேவாலயங்களுக்கு ரூ.1 கோடி: இந்த வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு- புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.3 லட்சம் வரை மானியமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளுக்கென நிகழாண்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், பள்ளிவாசல்கள், தர்காக்களில் பழுதுபார்ப்பு- சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் மசூதிகள் பழுதுபார்க்கத் தேவையான நிதியை வழங்க வக்ஃப் வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பள்ளிவாசல், மசூதிகளுக்கு ரூ.3 கோடி: இந்த வகையில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு- சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டு, இதற்கு ரூ.3 கோடி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் பொலிவடைய வழிவகை ஏற்படும்.
சிறுபான்மையினரின் நலனில் தமிழக அரசு: சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கவும், கல்வி- பொருளாதார நிலையை உயர்த்தவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெருசலேம் புனித பயணத்துக்காக வழங்கப்படும் நிதி உதவியைப் பயன்படுத்தி இதுவரை 2,340 கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கான நிர்வாக மானியம் ரூ.45 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஹஜ் குழுவுக்கான நிர்வாக மானியம் ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000-இலிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று தமிழக அரசு நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.