மஞ்சுவிரட்டின்போது மரணமடைந்த காவலரின் மனைவிக்கு அரசு வேலை : அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மஞ்சுவிரட்டின்போது மரணமடைந்த காவலரின் மனைவிக்கு அரசு வேலை : அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சனிக்கிழமை, மார்ச் 04, 2017,

சென்னை : விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சின்போது காளை மாடு குத்தியதால் உயிரிழந்த காவலர் சங்கரின் மனைவிக்கு அரசு வேலைக்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம், கான்சாபுரம் கிராமத்தில், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தனி ஆயுதப்படை காவலர் திரு.வே. சங்கர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக காளைமாடு ஒன்று, கழுத்துப் பகுதியில் குத்தியதால், பலத்த காயமடைந்த சங்கர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மறைந்த காவலர் திரு. வே. சங்கரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு நிகழ்வாக, அவரது மனைவி திருமதி முத்துசடச்சிக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை வழங்கி உடனடியாக பணி வழங்க, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டு, வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசாணையினை, தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.