மதுவிலக்கு அமுலில் இருந்த போது,அதை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

மதுவிலக்கு அமுலில் இருந்த போது,அதை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளி, ஆகஸ்ட் 05,2016,

சென்னை : பூரண மதுவிலக்கு அமுலில் இருந்த தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும். மதுவிலக்கு கொண்டு வருவதில் உண்மையான அக்கறை கொண்ட அரசு எனது அரசு தான் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் கூறினார்.

சட்டசபையில் மின் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீது நேற்று முன்தினம் நடந்த விவாதத்திற்கு நேற்று அத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசியதற்கு, பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது.,

சில கருத்துகளை இந்த அவையில் இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வது என் கடமை என கருதுகிறேன். 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் மதுவிலக்கு நீக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன.

2007-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசிய போது அன்றைய முதலமைச்சர் கருணாநிதி நான் அவர்களுக்கெல்லாம் சொல்வது, கள்ளச் சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று என்பது தான்… அறவே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாததற்குக் காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலே தான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, உலகப் பண்பாடு, உலகக் கலாச்சாரம் சாட்சியாக இருக்கின்றது” என்றார். மதுவிலக்கு குறித்து இது தான் கருணாநிதியின் உண்மையான கருத்து.

ஆனால், என்னைப் பொருத்தவரையில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன். எனவே தான், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன், சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைத்ததுடன், 500 மதுபானக் கடைகளையும் மூடியுள்ளோம். எனவே, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனது தலைமையிலான அரசு தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக மதுவிலக்கு மின் துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை மீது நடந்த விவாதத்திற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்து கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்தாமல் மதுக்கடைகளை திறந்ததே தி.மு.க. தான் என்று கூறினார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா சபைக்குள் வந்து அமர்ந்தார். அமைச்சர் தங்கமணி பேசியதற்கு பதில் அளிக்க வேண்டுமென்று தி.மு.க. கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசினார்.

அமைச்சர் இப்போது பேசிக் கொண்டிருந்தபோது மதுவிலக்கைப் பற்றி என்னென்ன செய்தீர்கள், என்னென்ன பேசினீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும் என்று சொல்லி அதோடு விட்டுவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு, இன்றைய இளைய தலைமுறைக்கு முழு விவரங்கள் தெரியாது. ஆகவே, அமைச்சர் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த தமிழ்நாட்டில், மதுவிலக்கை நீக்கி உத்தரவிட்டதே தி.மு.க. தலைவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று அமைச்சரை தங்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தி.மு.க. துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு பதில் அளிக்க அனுமதி கேட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது.,

முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய அமைச்சருக்கு அறிவுரை கூற எனக்கு எல்லா உரிமையும் உண்டு. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அங்குமிங்கும் மோதிக்கொண்டு, ஒருவருக்குப் பக்கத்தில் இன்னொருவர் அமர்ந்து அறிவுரைகள் கூறிக்கொள்வதுபோல் நான் ஓடிப்போய் சென்று அமைச்சர் அருகில் அமர்ந்து அறிவுரை கூற முடியாது. எனவே, அவை விதிகளுக்கு உட்பட்டு, தங்கள் வாயிலாக நான் கூற விரும்பிய அறிவுரையை என்னுடைய அமைச்சருக்கு நான் கூறினேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மீண்டும் துரைமுருகனும், தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று, பதில் பேச வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். சபாநாயகர் அனுமதி தர மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். அப்போது முதல்வர் ஜெயலலிதா மறுபடியும் குறுக்கிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.,

முன்பெல்லாம் அவையில் ரகளை செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டுமென்றால், தாங்கள் மெத்த சிரமப்பட்டு, காவலர்களை அழைத்து, அவர்களும் மெத்த சிரமப்பட்டு இவர்களை வெளியே தூக்கிக்கொண்டு, இழுத்துக் கொண்டு செல்வார்கள். இப்போது அதெல்லாம் தேவையில்லை. இரண்டே இரண்டு வார்த்தைகளைச் சொன்னால் போதும். ஒன்று, கச்சத் தீவு மீட்பு. கச்சத் தீவு என்று சொன்னால், எதிர்க்கட்சியினர் வெளியே கிளம்பிவிடுகின்றார்கள். இரண்டாவது, பூரண மதுவிலக்கு நீக்கம். இதைச் சொன்னாலும் வெளியே கிளம்பிவிடுகிறார்கள். தங்களுடைய பணியை நான் எளிதாக்கியிருக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது. சிரிப்பலை ஓய்ந்ததும், சபாநாயகர் தனபால் பேசினார். அவர் பேசுகையில், முதல்வர் தெளிவான பதில் அளித்திருக்கிறார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அளித்த பதில்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.