மத்திய அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் வழங்குவதில் கடுமையான பாதிப்பு : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மத்திய அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் வழங்குவதில் கடுமையான பாதிப்பு : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

வியாழன் , நவம்பர் 17,2016,

மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் முடங்கிப்போயுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த 8.11.2016 அன்று புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியால் மதிப்பிழக்கச் செய்ததன் விளைவாக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8.ம்தேதி வெளியிட்ட அறிவிக்கை எண்.2652ன் படி இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த பயிர்க்கடனுக்கான தொகையை உரிய காலத்தில் திரும்பச் செலுத்த இயலாமலும், கிராம அளவில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் புதிய வைப்பீடுகள் ஏதும் பெறமுடியாமல் முற்றிலும் செயலிழந்துள்ளன. மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கிய பயிர்க்கடன் மற்றும் இதர கடன்களை வசூலிப்பதில் பெருமளவில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்படும் சம்பா பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய பயிர்க்கடன்கள் ஏதும் வழங்க இயலாத நிலை உள்ளது.

கடந்த 5 1/2 ஆண்டுகளில், உரிய காலத்தில் பயிர்க்கடன் தொகையை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு அரசின் சலுகையாக ரூ.910 கோடி வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கு வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய தவணை தேதிக்கு முன்னர் பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 7சதவிகித வட்டி மானியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய விவசாயிகள் தங்களது வேளாண்மைத் தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 7.11.2016 வரை 54,33,248 விவசாயிகளுக்கு ரூ.25,289.65 கோடி அளவிற்கு வட்டியில்லாப் பயிர்க்கடன்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வாண்டு ரூ.6000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 7.ம்தேதி வரை 3,38,612 விவசாயிகளுக்கு ரூ.2,075.41 கோடி மட்டுமே பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015-16 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 6,38,643 விவசாயிகளுக்கு ரூ.3512.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிக்கையால் பயிர்க்கடன் வழங்குவதில் ஆண்டுக் குறியீட்டினை முழுமையாக எய்த இயலாத நிலை எழுந்துள்ளதோடு, தமிழகத்தில் உணவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்படும்.

பெருவாரியான கிராமப்புற மக்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலேயே சேமிப்புக் கணக்குகளின் மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது எழுந்துள்ள இச்சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருவதுபோல கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் செலுத்த முடியவில்லை. கடந்த 31.3.2011 அன்றுவரை கூட்டுறவு அமைப்புகளில் ரூ.26,247 கோடியாக இருந்த வைப்புத்தொகை ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதல் காரணமாக தற்போது 2 மடங்கு அளவிற்கு அதாவது ரூ.54,914 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, புதிய வைப்பீடுகள் ஏதும் பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களும் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது மாநிலத்தில் செயல்படும் 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தரமான உரம் மற்றும் விதைகளை வழங்க இயலவில்லை. பயிர்க்கடன் வழங்கும்போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு பிரிமியம், கிராம அளவில் உள்ள 4344 பொதுச்சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், பேருந்து மற்றும் ரயில் பயணச் சீட்டு போன்ற அத்தியாவசியப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து வகையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் இழந்து மிகுந்த வருவாய் இழப்புக்குள்ளாகி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த 14.ம்தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின் படி, மத்திய கூட்டுறவு வங்கிகள் எவ்வித பண பரிவர்த்தனைகளோ அல்லது சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், அவற்றின் 813 கிளைகளும், அவற்றின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் இவ்வறிவிப்புகளால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்கு சேவைகளை அளிக்க இயலாமல் முடங்கிப்போயுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை இழக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்.அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர்.த.ஆனந்த்தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர்.ஆர்.இளங்கோவன் கூடுதல் பதிவாளர்கள் முனைவர் க.இராஜேந்திரன்,.இரா.கார்த்திகேயன், \எம்.மோகன், .பா.பாலமுருகன், ஆர்.பிருந்தா,.அந்தோணிசாமி ஜான் பீட்டர், மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.