மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

சனி, செப்டம்பர் 10,2016,

சென்னை ; மனிதநேயத்தின் இன்னொரு பெயர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், அவருக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா தன் வண்ண எண்ணத்தால், எங்களுக்கு மட்டுமல்ல, எண்களுக்கும் மதிப்பு கூட்டுபவர், அதற்கு எடுத்துக்காட்டுதான் 110. விதி 110-ன் மூலம் புத்தம்புது திட்டங்களுக்கு புதுப்பிறவி அளிப்பவர் ஏழை, எளியோருக்கு புனர்ஜென்மம் தருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா. முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதிப்பதெல்லாம் மக்களின் வாழ்க்கை மரகதமாய் ஜொலிப்பதற்கே.முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவு எழுத்தெல்லாம் மக்களின் வாழ்க்கை அழகு சித்திரமாய் துலங்குவதற்கு.அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையின் மறு வடிவம் முதலமைச்சர் ஜெயலலிதா. திட்டங்கள் தீட்டுவதில், திட்டங்கள் செயல்படுத்துவதில் ஜெயலலிதாவிற்கு நிகர் முதலமைச்சர் ஜெயலலிதா தான். விதிக்கே விதி எழுதி கடைகோடி மக்களின் வீடுகளுக்கு வாழ்வும், வளமும் அள்ளி சேர்ப்பவர் முதலமைச்சர் ஜெயலலிதா. கருணையின் வடிவாம் மக்கள் துயர்துடைக்க ஓடிவந்து வாரிவழங்கிய செயல்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
மனிதநேயத்தின் இன்னொரு பெயர் முதலமைச்சர் ஜெயலலிதா. இதற்கான நிரூபணங்கள் வாழுகின்ற சான்றுகளாய் வரிசை கட்டி நிற்கின்றன! அ.தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளராக, 1983-ம் ஆண்டில் ஜெயலலிதா இந்த இயக்கத்தை மெருகேற்றி ஒரு ராணுவத்தை போன்ற கட்டுக்கோப்புடன் உருவாக்கி கொண்டிருந்த நேரம் அது.முதலமைச்சர் ஜெயலலிதா தினந்தோறும் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்தித்து அந்த தொண்டர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுத்து வந்தார்.
அவ்வாறு கோரிக்கை கொடுக்கின்ற கட்சிகாரர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர்களது வாழ்க்கை நிலையை கண்பார்வையிலேயே கண்டறிந்து பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாத வகையில் அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்புவார்.
அந்த சமயத்தில், ஒரு நாள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த கடைக்காரர் ஒருவர் ஜெயலலிதாவிடம் வந்து ஒரு புகாரை கொடுத்தார். அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் எனது கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கி சேதாரம் விளைவித்து விட்டார்கள், எனக்கு நியாயம் வழங்குங்கள் என்று அந்த புகாரிலே கோரிக்கை விடுத்து இருந்தார்.
அப்போது நான் கட்சியில் சைதை தொகுதி செயலாளர் பொறுப்பில் இருந்தேன். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, என்னை அழைத்து அந்த புகார் மீது விசாரணை செய்து உண்மைத்தன்மையை அறிக்கையாக தாருங்கள் என்று ஆணையிட்டார். அவரின் ஆணையை ஏற்று அங்கு நடந்தது என்ன என்பதை ஆய்வு செய்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒரு விரிவான அறிக்கையைக் கொடுத்தேன்.
கட்சிக்கு நன்கொடை கொடுக்க மறுத்ததால் உணர்ச்சி வசப்பட்டு நம்முடைய கட்சிக்காரர்கள் தான் அத்துமீறி விட்டார்கள் என்ற உண்மையை முதலமைச்சர்ஜெயலலிதாவிடம் கொடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கையை வாங்கி பார்த்த உடனே, அந்த தவறினை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த தவறு செய்தவர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, கடைக்கு ஏற்பட்டுள்ள சேத மதிப்பை நான் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்து விடுகிறேன் என்றும் அவர் சொன்னார்.
முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதை அந்த கடைக்காரரிடம் நான் சொன்ன போது ஆளும் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாறுபட்டவர் என்று நிரூபித்துவிட்டார். இப்போது எங்களுக்கு ஒரு மாபெரும் பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு நஷ்டஈடு என்ன வேண்டும் என்று அந்த கடைக்காரர் கூறினார்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் முழக்கமிட்டார் அல்லவா! அதை செயல் வடிவில் 33 ஆண்டுகளுக்கு முன்பு அன்று கண்டேன். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து நஷ்டஈடு வழங்குகிறேன் என்று கூறி மனிதாபிமானத்தின் சிகரமாக காட்சி தந்தார்.
இதன் அடிப்படையில்தான் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு நான் அறக்கட்டளை ஆரம்பித்த நேரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிடம் மிகுந்து காணப்படுகின்ற மனிதநேயம் என்னும் பெயரிலேயே மனிதநேய அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும், மனிதநேயத்தின் சின்னமாக விளங்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய கரங்களால் வேளச்சேரியிலில் அவரின் பெயரில் அமைந்துள்ள அம்மா இலவச திருமண மண்டபத்தை திறந்து வைத்ததுடன் மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கு ஏற்றி வைத்து அன்று தொடங்கிவைத்தார்.
மனிதநேய அறக்கட்டளையின் கல்விப்பணி சிறப்பான வளர்ச்சிபெற்று நாடு முழுவதுமான பாராட்டுகளை பெறுகிறது என்று சொன்னால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைராசியும், கருணையுள்ளத்தோடு வழங்கிய நல்லாசியும் தான் அதற்கெல்லாம் காரணம் என்பதை பெருமையோடும், பெருமிதத்தோடும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரால் தொடங்கிவைக்கப்பட்ட மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று, பல்வேறு விதமான தேர்வுகளில் இதுவரை 2831 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆக 2831 பேர் போட்டி தேர்வுகளான யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட வருவாய் அலுவலர்களாக, துணை ஆட்சியராக, மாவட்ட நீதிபதியாக, உதவி ஆய்வாளர்களாக, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களாக என நாடெங்கும் பரவி பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மொத்தம் 145 சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதையும் சாதி, மதம், இனம் பேதம் பார்க்காமல் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா எனது வாழ்க்கையில் 1983-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை பல்வேறு விதமான சிறப்புகளை மறக்கமுடியாத அங்கீகாரங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா அன்றை தினம் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை இந்த உலகத்திலே நான் பெற்றிருக்கிற பேறுகளுக்கெல்லாம் பெரும் பேறாகும்.
அவர் பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டம், சரித்திரக்கூட்டமாக, சாதனைக்கூட்டமாக மாறியது. அன்று அந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை என்னுடைய சந்ததிகள் ஏழு ஏழு தலைமுறைக்கும் போற்றி பாதுகாக்கும் உரையாகும். அந்த உரையில் சில பகுதிகளை கூற விரும்புகிறேன்.
“இந்த கூட்டம் சைதை துரைசாமிக்கு பாராட்டு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைதை துரைசாமி இளைஞர், லட்சிய வீரர், புரட்சித்தலைவர் பட்டாளத்தின் துணிச்சல்மிக்க சிப்பாய். புரட்சித்தலைவர் வெட்டி வா என்று கட்டளையிட்டால் வெட்டி, கட்டிக்கொண்டு வருவார் சைதை துரைசாமி. 1972-ம் ஆண்டு புரட்சித்தலைவரை கருணாநிதி தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார். 26 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே செய்த முடிவு அது. புரட்சித்தலைவரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டும் கருணாநிதி நின்றுவிடவில்லை. தனது செயலை நியாயப்படுத்திப் பேச இதே சைதைக்கு அப்போது கருணாநிதி வந்தார்.
கருணாநிதி பேச எழுந்தபோது ஒரு இளைஞர் மேடைக்கு வந்தார். கருணாநிதிக்கு 26 எலுமிச்சம் பழங்கள் கோர்த்த மாலையை அணிவித்தார். அந்த இளைஞர்தான் சகோதரர் சைதை துரைசாமி. கருணாநிதிக்கும், அவரோடு சேர்ந்த 25 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தலையில் தேய்த்துக் கொள்ளவோ என்னவோ அந்த இளைஞர் 26 எலுமிச்சம் பழங்களை மாலையாக கட்டி அணிவித்தார். அந்த துடிப்புமிக்க துணிச்சல்மிக்க இளைஞர்தான் சைதை துரைசாமி.
புரட்சித்தலைவரை தி.மு.க.வை விட்டு வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம் என்பதை உணர்த்தவே சைதை துரைசாமி, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலையை அணிவித்தார். சைதை துரைசாமி செய்தது சரிதான் என்பதை பின்னால் காலம் உணர்த்தியது.
புரட்சித்தலைவரை தி.மு.க.வை விட்டு நீக்கியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை காலம் உணர்த்தியது, என்றாலும் இன்னமும் எலுமிச்சம் பழம் மாலை அணிவிக்க வேண்டிய நிலையில் தான் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு இன்னும் தெளியவில்லை.
இப்போது ஜனநாயகத்தை காக்க படைபட்டாளத்தோடும், ஆள் அம்புகளோடும் கருணாநிதி கிளம்பி இருக்கிறார். எந்த கருணாநிதி தெரியுமா? சகோதரர் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகளைப்போட்ட கருணாநிதி; சகோதரர் சைதை துரைசாமி 10 ரூபாய் பிக்பாக்கெட் அடித்ததாக ஒரு பொய் வழக்கு, கருணாநிதி மகன் படத்தையும், ஒரு தியேட்டரையும் கொளுத்தியதாக இன்னொரு பொய் வழக்கு; அவர் மீது கொலை வழக்குக்கூட சுமத்தப்பட்டது.
ஜனநாயக ஜாம்பவான் கருணாநிதி ஏன் இத்தனை பொய் வழக்குகளை அடுக்கடுக்காக போட்டார்? சகோதரர் சைதை துரைசாமி தனக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டது எத்தனை நியாயம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் கருணாநிதி சரம்சரமாக பொய் வழக்குகளை தொடுத்தார்.”
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த உரையில் குறிப்பிட்டார் என்பதை மிகவும் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்படி புரட்சித்தலைவர் இருந்த காலம்தொட்டு இன்றுவரை எளிய தொண்டனான என் மீதும், என் குடும்பத்தின் மீதும் பெற்ற தாயினும் மேலாக பேரன்பு காட்டி பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் எனக்கு வழங்கி என்னையும், எனது குடும்பத்தையும் காக்கும் கடவுளாக முதலமைச்சர் ஜெயலலிதா விளங்குகிறார்.
1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு 2002-ல் ஏழு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தென் சென்னை மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியை எனக்கு வழங்கினார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. சார்பில் களப் பணி ஆற்றுவதற்கான வாய்ப்பினை தொடர்ந்து வழங்கினார். 2006-ம் ஆண்டு முதல் முதலாக மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் மக்கள் நலப்பணிகளை செய்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவிடத்தில் நான் ஒரு வேண்டுகோளை வைத்து, அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்பதலைப் பெற்று, வேளச்சேரியில் கட்டப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபத்தை அவர் திறந்துவைத்தார். அதே நாளில் தான் போட்டி தேர்வுகளுக்கான பணிகளையும் குத்துவிளக்கு ஏற்றி தனது திருக்கரங்களால் தொடங்கிவைத்தார்.
மனிதநேய கல்வி அறக்கட்டளையின் இலவச திருமண மண்டபம் திறப்பு விழாவில் மக்கள் நலத்தொண்டர் என்று என்னை பாராட்டி வாழ்த்தியது, எனது நெஞ்சை நெக்குறுக வைக்கும் வெகுமதி. 2010-ல் நான் அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒரு சாதாரண தொண்டனான என்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோடநாட்டில் இருந்து, சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சொல்லொணாப் பெருமையையும், கவுரவத்தையும் எனக்கு அளித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து நிற்கிற வாய்ப்பினை எனக்கு வழங்கினார். அந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வினர் செய்த தேர்தல் முறைகேடுகளினால் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அது குறித்து என்னால் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த தேர்தலில் என்னென்ன விதி மீறல்கள், தில்லுமுல்லுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபித்து நியதியை உணர்த்துவோம்! அன்றைக்கு இந்த உலகம், நீதி நின்று வெல்லும், அது என்றும் உண்மைச் சொல்லும் என்பதை அறிந்துகொள்ளும்.
அதற்கு பிறகு ஜெயலலிதா எனது வாழ்நாளில் நான் எதிர்பார்க்காத மாபெரும் அங்கீகாரத்தை, அதாவது 176 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னை மாநகராட்சியின் எல்லையை 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன் முதலாக இந்த சென்னை மாநகராட்சியினுடைய மாமன்ற தேர்தலில் மேயர் பதவிக்கான வேட்பாளராக என்னை அறிவித்தார்.
அந்த மன்ற தேர்தலில் ஏறத்தாழ ஐந்தே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க.வின் முதல் மேயர் என்ற பெருமையை ஏற்படுத்தி கொடுத்தார். அதன் பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி என்று நிலை உயர்த்தி அதன் முதல் மேயர் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பையும் வழங்கினார்.
“சென்னை மாநகராட்சிக்கு ஒரு தூய்மையான நிர்வாகத்தை தரவேண்டும். சுத்தமான கை. கை சுத்தமான சென்னை மாநகராட்சி நிர்வாகம். அதுதான் என்னுடைய லட்சியம்” என்று முழங்கினார். அவர் விரும்பிய அத்தகு நிர்வாகத்தை மக்களுக்கு தர வேண்டும் என்று, அவர் கொடுத்த வாக்குறுதியை நெஞ்சிலே பதிய வைத்து, என்னுடைய இந்த 5 ஆண்டு காலத்தின் ஒவ்வொரு வினாடியிலும் பணியாற்றி வந்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார். அந்த அரசியலில், என்னை நிலைபெறச் செய்து மக்களுக்கு தொண்டு செய்வதே வாழ்க்கை என்பதை தன் வாழ்வின் மூலமாகவே இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி, மக்கள் மத்தியிலும், அரசியலிலும் எனக்கு அங்கீகாரம் வழங்கிய மாபெரும் தலைவர் மகத்தான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
அ.தி.மு.க. என்று பெயர் கொண்டிருந்த இந்த இயக்கத்தை அ.தி.மு.க. என்று பெயர் மாற்றம் செய்தபோது, எம்.ஜி.ஆரை எல்லோரும் எள்ளி நகையாடினார். ஆனால், இன்றைக்கு அந்த அ.தி.மு.க.விற்கு இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை, பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் இந்த பூவுலகிலேயே இல்லை. அத்தகைய ஆற்றல் மிக்க தலைவரின் புகழைப் பாடுவதல்லாமல், எனக்கு வேறு என்ன பணி இருக்க முடியும்?
இப்படி சிறப்புக்கு மேல் சிறப்பினை எனக்கு வழங்கி யாருக்கும் கிடைத்திராத பாக்கியத்தை நான் பெறும் வகையில் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து என்னையும், என் குடும்பத்தையும் காத்துவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நானும், எனது சந்ததிகளும் இந்த பிறவியில் மட்டுமல்ல, தொடர்கின்ற கால காலங்களுக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதை செயலில் காட்ட, என் வாழ்வின் பொது பிரகடனமாகவே, இதை நான் அறிவிக்கிறேன்.
என்னுடைய சொத்துகள் அனைத்தையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரால், தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் செய்து அந்த நன்றிக் கடனை திரும்பச் செலுத்துவேன். இது சத்தியம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியளிக்கிறேன்.இவ்வாறு  சைதை துரைசாமி பேசி னார்.