முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி

வியாழக்கிழமை, ஜனவரி 28, 2016,

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம், உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைராஜ், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த குடல்நோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் அரவிந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நுண் துளை கருவி எனும் லேப்ராஸ்கோப் மூலம் நவீன சிகிச்சை மேற்கொண்டு, புற்றுநோய் கட்டியை அகற்றினர். வழக்கமாக இதுபோன்ற ஆபத்தான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, அரசு மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

தனியார் மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சையை எவ்வித கட்டணமும் இன்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயி துரைராஜின் குடும்பத்தினர் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.