மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி

வியாழன் , மே 26,2016,

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தென்னிந்திய மருத்துவர்கள்-செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி, பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, மாணவர் சேர்க்கை தொடர்பாக, மத்திய அமைச்சரவை இயற்றிய அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, இந்த ஆண்டு வழக்கம்போல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலமே நடைபெறவுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையின் காரணமாகவே பொது நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக, தென்னிந்திய மருத்துவர்கள், செவிலியர்கள் கூட்டமைப்பு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.