மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அமைதிப் பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அமைதிப் பேரணி

வியாழன்,ஜனவரி 5,2017,

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி இன்றுடன் 30 நாள் நிறைவடைகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வண்ண மலர்களை தூவியும், மெழுகுவர்த்திகள் ஏற்றியும், மொட்டை அடித்தும் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30வது நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த அமைதி ஊர்வலம் தசரதபுரம், சாலிகிராமம், கேகேநகர் வழியாக சிவன் பூங்காவை அடைந்தது. பின்னர் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து அதிமுகவினர் மவுனமாக ஊர்வலம் சென்றனர். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 300க்கு மேற்பட்ட அதிமுகவினா் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு வைத்திருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலா் துவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 30வது நினைவுநாளையொட்டி, கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் 30வது நினைவுநாள் மவுன ஊர்வலத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மோகனூர் சாலை அருகே தொடங்கிய இந்த மவுன ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை மாவட்ட அதிமுகவினர் சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. கோவை சுந்திராபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30வது நினைவு தினத்தையொட்டி, வானொலித் திடலில் இருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30வது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற மவுன ஊர்வலத்தில், அமைச்சர் சண்முகம் மற்றும் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். பின்னர் மந்தக்கரையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30வது நினைவுநாளையொட்டி, அமைதிப்பேரணி நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல், மதுரை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகம் முழுவதும்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30 ஆவது நினைவு நாளையொட்டி, அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.