மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  உறுதி

செவ்வாய், டிசம்பர் 13,2016,

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் “மிலாதுன் நபி” வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, இஸ்லாமியர்களுக்காக செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அம்மா அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

புரட்சித் தலைவி அம்மா இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணற்றவை ஆகும். உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கி வருவது, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிருவாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது, பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுது பார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கியது,

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிருவாக மானியத்தை 30 லட்சம் ரூபாயாக உயர்த் தியது, மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு வழங்கப்படும் இணை மானியத் தொகையை 1:1 என்பதிலிருந்து 1:2 என்ற விகிதாச்சாரத்தில் உயர்த்தப்பட்டு ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருவது, பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வக்ஃப் நிறுவனங்களின் பெரிய அளவிலான பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு மானியமாக இந்த நிதியாண்டு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, நாகூர் தர்கா சந்தனக் கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை வழங்கியது, உருது மொழியை முதல் அல்லது இரண்டாவது மொழியாகப் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை உயர்த்தியது.

இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கென அம்மா முன்னெடுத்துத் தந்த இந்த சீரிய திட்டங்களை, அம்மாவின் அரசு இம்மியும் குறைவில்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இறை தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இத்திருநாளில், உலகில் அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெரு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாதுன் நபி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.