மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள் வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள்  வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி

வெள்ளி, டிசம்பர் 09,2016,

சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக 3–வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், 6–ந்தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்தினர். 2–வது நாளாக நேற்று முன்தினமும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கான கூட்டம் அதிகம் இருந்தது. தொடர்ந்து 3–வது நாளாக நேற்று ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது கொண்ட அன்பு, ஈர்ப்பு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்தும் மக்கள் திரண்டு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயலலிதாவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் தவிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

துக்கம் தாங்காமல் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளே நுழையும் போதே, ‘அம்மா.. அம்மா…’ என்று கூக்குரலுடன் சிலர் அழுதுக்கொண்டே வரிசையில் வந்து, அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக மேடையுடன் கூடிய கூடாரம் நேற்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த கூடாரத்தில் அ.தி.மு.க. ஆண், பெண் தொண்டர்கள் வரிசையாக மொட்டை அடித்தனர். திருப்பூர் எம்.எல்.ஏ., குணசேகரனும் மொட்டை போட்டார். அரசு பெண் வக்கீல் ஒருவரும் தனது தலைமுடியை மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

சில அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சோகம் சூழ்ந்த முகத்தோடு ஜெயலலிதா சமாதி அருகே அமர்ந்திருந்தனர். அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் எந்தவித சிரமமுமின்றி ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏதுவாக போலீசாரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.ஜெயலலிதா நினைவிடம் அருகே  டாக்டர்களும் இருக்கிறார்கள். மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. யாராவது மயங்கி விழுந்தால் முதலுதவி சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது.