மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016,

சென்னை : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று பகல் 11-30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்ஜமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்ற பேரவையில் வைப்பதற்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச்சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும், முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம் என பெயர்மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.