மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

சென்னை ; மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து குடும்பம், குடும்பமாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகை த்ரிஷா தனது தாயாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப் பட்டது. அன்று முதலே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் ஜெயலலிதா நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

6-வது நாளாக நேற்றும் ஏராள மானோர் நினைவிடத்துக்கு வந்திருந்தனர். விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக எம்ஜிஆர் நினைவிடம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. நினைவிடத்தில் உதிரிப்பூ விற்பனை நேற்று களைகட்டியது.

நடிகை த்ரிஷா அவரது தாயுடன் நேற்று காலை ஜெயலலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெயந்திலால் சலானி, செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா வை தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மொட்டையடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இல்லத்தரசிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவியர், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும், மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா  நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களை, அவர்கள் நெஞ்சம் நெகிழ நினைவுகூர்ந்து, தங்களது நன்றிகளை கண்ணீர்மல்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் காணிக்கையாக்கி வருகின்றனர்.

காலை முதல், இரவு வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்த வருவதால், அவர்களுக்கு 3 வேளையும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. யாருக்கேனும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட மருத்துவ வசதியும், சுகாதார வசதியும் செய்யப்பட்டுள்ளது.