மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

ஞாயிறு, ஜனவரி 15,2017,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் என்று தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டது. பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களிலான இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது ;

தமிழ் மொழியிலுள்ள அற நூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அதனால்தான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார்.
தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியை திருவள்ளுவர் தந்திருக்கிறார், என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்.
இப்படி தமிழ் அறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட, சிறப்பு வாய்ந்த திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் தினத்தில், தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினாலான விருதுகளை வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
திருவள்ளுவர் அரசியல் நெறியை இறைமாட்சி என்னும் தொடரால் அழகாகக் கூறுகிறார். அவர் கூறியபடி அரசியல் நெறி தவறாமல் ஆட்சி நடத்திய பெருமை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலை, கலாசாரத்தையும் பேணிக் காப்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலாதாவுக்கு நிகர் வேறு யாருமில்லை. அவர் காட்டிய பாதையில் தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, பிற மொழிகளுக்கு இல்லாத பல சிறப்புகள் உண்டு.இந்த இனிய விழாவில் தமிழ் அறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, தமிழ் மொழியில் உள்ள சொல்லாற்றல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கம்பராமாயணத்தை இயற்றிய கம்பரை, ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை புகழ்ந்து 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்ற புலவர்கள் 1000-க்கு ஒரு பாட்டில் சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் எனக் கூறினர். இதைக் கம்பர் மறுக்கவில்லை.
மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ 1000-த்தில் ஒருவர் என்கிறீர்கள், அப்படியே செய்கிறேன்.” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் சடையப்ப வள்ளலை புகழ்ந்து பாடினாராம். அதன்படி, வள்ளல் என்றாலே ஆயிரத்தில் ஒருவன் தான் என்று இன்றைக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த கி.வா.ஜ., ஒரு முறை தன் நண்பருடன் ஒரு வீட்டுக்கு சாப்பிடச் சென்றிருந்தார். அந்த வீட்டு உரிமையாளர், அவரை உபசாரம் அதிகமாகச் செய்வதாக நினைத்து மாறி, மாறி பாயசம் ஊற்றிக் கொண்டே இருந்தார். அசந்து போன கி.வா.ஜ., ஒருவரைக் கொல்ல விஷம்தான் தேவை என்று நினைத்தேன். பாயசத்தாலும் கொல்ல முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள், என்று நயம்படக் கூறினாராம்.
அதுபோல கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை கங்கிரஸில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அதை ஒரு சினிமா பாடலில் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ என்று பல்லவியாக்கி பாடல் எழுதினார்.
பின்னர், கண்ணதாசன் காங்கிரசில் சேர்ந்த பிறகு, அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா? என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல் நலத்தை விசாரித்தாராம்.
இப்படி, எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுப்பூர்வமாக, நகைச்சுவையுடன், நல்ல பல கருத்துகளை நயம்பட தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கெளரவிக்கும் வகையில், அவர்களது பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் அறிஞர்களின் பெயர்களில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களை தட்டி எழுப்புவதற்காகதன் வாழ்நாளையே அர்ப்பணித்தத் தலைவர்களின் பெயர்களிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற விழாக்கள் மக்களிடையே, குறிப்பாக, இளைய சமுதாயத்தினரிடையே, தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற ஒரு ஆசையை ஏற்படுத்துவதோடு, நாமும் தமிழ் அறிஞராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் அவர்களின் மனங்களில் நிச்சயம் ஏற்படுத்தும் என்றார்.

விழாவில் புலவர் பா.வீரமணிக்கு திருவள்ளுவர் விருதையும், பேராசிரியர் ச.கணபதிராமனுக்கு மகாகவி பாரதியார் விருதையும், கவிஞர் கோ.பாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், மறைமலை இலக்குவனாருக்கு திரு.வி.க. விருதையும், மீனாட்சி முருகரத்தினுக்கு கி.ஆ.பெ. விசுவநாதம் விருதையும், கவிஞர் கூரம் மு.துரைக்கு பேரறிஞர் அண்ணா விருதையும், ரு.டி.நீலகண்டனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதையும், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதையும், மருத்துவர் இரா.துரைசாமிக்கு அம்பேத்கர் விருதையும் முதல்வர் வழங்கினார்.விழாவில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பா.பெஞ்ஜமின், கடம்பூர் ராஜு, டி.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.