மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் புகழாரம்

புதன்கிழமை, ஜனவரி 25, 2017,

சென்னை : மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு தமிழக சட்டமன்றப் பேரவை நேற்று புகழஞ்சலி செலுத்தியது. மாண்புமிகு அம்மாவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசி புகழாரம் சூட்டினர்.

தமிழக சட்டசபையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ,மற்றும் உறுப்பினர்கள் தனியரசு, நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி, ஆகியோர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.

முன்னதாக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்டமன்றப் பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, தமிழகத்தின் இருண்ட நாள். நம்மையும், உலகெங்கும் உள்ள தமிழர்களையும் நிலைகுலையச் செய்த நாள். அன்றுதான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாக இருந்து தமிழகத்தின் உரிமைகளை மீட்க, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரான ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்தார்.
எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி 1982-ஆம் ஆண்டு அதிமுகவில் காலடி எடுத்து வைத்த ஜெயலலிதா, சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர்நிலைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1983 ஆம் ஆண்டு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அப்போது நடந்த திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்தார்.
அதன்பின், அவர் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணாவின் இருக்கையே அவருக்கும் ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவையில் அவரது உரையிலுள்ள பொருள், மொழிப் புலமை, உச்சரிப்பு ஆகியவற்றை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.
இழந்த சின்னம் மீட்பு: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி இரண்டாக பிளவுபட்டது.
1989-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரது தலைமையிலான அணி 27 இடங்களைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றுபட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் சின்னமான இரட்டை இலை மீட்கப்பட்டது. இந்தியாவிலேயே இழந்த சின்னத்தை மீட்ட ஒரே இயக்கம் அதிமுகதான். அதனை மீட்ட பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
1991-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 225 இடங்களைப் பெற்றுத் தந்ததோடு, தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்-இளம் முதல்வர் என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதன் பின், 2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ததோடு, முதல்வராகவும் பொறுப்பேற்று நல்லாட்சியை நடத்திக் காட்டினார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியை பொதுத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்து வரலாறு படைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
கணக்கில்லாத சாதனைகள்: அனைத்திலும் முதலாக இருந்த ஜெயலலிதா, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க விரும்பி அதை செயல்படுத்தியும் காட்டினார் என்று பேசினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து, அவர் தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தின் விவரம்:-
அகிலத்தின் அகல் விளக்காய், தியாகத்தின் திருவிளக்காய், ஒளி தரும் தீபமாய், மனிதாபிமானத்தின் மறுஉருவமாய், மனிதநேயத்தின் இலக்கணமாய், காவிரியை மீட்டு வந்த பொன்னியின் செல்வியாய், தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவியாய், எட்டரை கோடி தமிழ் மக்களின் ஏந்தலாய், பன்மொழிப் புலவராய், பல்கலை வித்தகராய், கல்விக்கு கணினி, உயிர் காக்க காப்பீடு, கழனிக்கு காவிரி, உலைக்கு அரிசி, தமிழக உயர்வுக்கு ஆலை என அனைத்தையும் தந்து, ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திட்ட வான் மழை மேகமாய், தமிழ் மக்களின் தாயாய், தமிழ் மொழியின் பாதுகாவலராய், தமிழகத்தின் தவப்பெரும் புதல்வியாய், “மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்ற தத்துவத்தையே வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டு தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் குறிப்பாக ஏழை-எளிய மக்களுக்கு தொண்டாற்றி, இறுதிவரையில் தனக்கென வாழாமல் பிறருக்குரியவராக வாழ்ந்தவரும், அனைவரின் அன்புக்கும், போற்றுதலுக்கும் உரியவராகவும், மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பணியாற்றியவர் ஜெயலலிதா.
யாரும் எதிர்பாராத வகையில் அவர் மறைந்தமை குறித்து பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு, அவரது மறைவால் வருந்தும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர்.

தீர்மானத்தின் மீது ஸ்டாலின் பேசியது:-

மறைந்த முதல்வரும், நானும் ஒரே காலகட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று பேரவைக்குள் வந்திருக்கிறோம். அன்றைக்கு நான் ஆளும்கட்சி வரிசையில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தேன். அவர் எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது, திமுக சார்பில் நிதியளிக்க 2005-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து ரூ.21 லட்சம் வழங்கினேன். அப்போது அவர் எங்கள் கட்சியின் தலைவர் கருணாநிதி குறித்து நலம் விசாரித்ததோடு, தனது நன்றியையும் சொல்லச் சொன்னார்.
சட்டப் பேரவையில் இருவரும் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் 11-ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போது, அதுகுறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். விழாவில் இடம் ஒதுக்கப்பட்ட சம்பவத்துக்கு வருத்தப்படுகிறேன் என்று கூறியதுடன், மாநில நலனுக்கு இணைந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம். ஆனால், எங்களைப் பொருத்தவரையில், பாராட்டப்படக்கூடிய, பெருமைப்படக் கூடிய ஒரு சிறப்பு, அவர் எதற்கும் அஞ்சாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதை சந்திக்கக் கூடிய ஆற்றல் படைத்தவராக விளங்கினார் என்பதே உண்மை. இன்றைக்கு அவரை இழந்திருக்கிறோம். திமுக சார்பிலும், கட்சித் தலைவர் கருணாநிதி சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், எந்த பிரச்சினையானாலும் தைரியமாக முடிவு எடுக்கக்கூடியவர் ஜெயலலிதா என்றும், விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.

இந்த இரங்கல்  தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பேசினார்கள். இறுதியாக  சபாநாயகர் தனபால் பேசினார். இதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடம் எழுந்து  நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பின்  ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் சட்டசபை 27–ம் தேதி  அன்று காலை 10 மணிக்குக் கூடும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.