மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றபடும் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றபடும் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017,

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் எனப்படும் பங்களாவில் வசித்து வந்தார். திரை உலகில் அவர் புகழ் பெற்று இருந்த போது தனது தாயார் சந்தியாவுடன் சேர்ந்து அந்த பங்களாவை கட்டினார்.

இதற்கிடையே ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மனோஜ்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க. வக்கீல்கள் பிரிவினர் இதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற இந்த கையெழுத்து இயக்கத்தை ஒ.பன்னீர்செல்வம் நேற்று முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் முனுசாமி, முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கையெழுத்திட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.