மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017,

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று 69-வது பிறந்தநாள். இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழக அரசு சார்பிலும் ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நேற்று ஜெயலலிதாவுக்கு 69-வது பிறந்த தினம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மரக்கன்றுகள் வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.13 கோடியே 42 லட்சம் செலவிட திட்டமிட்டுள்ளது.  சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளது. அவற்றை நடுவதற்கான தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக அவர் ஒரு மகிழம் பூ மரக்கன்றை நட்டார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் 69 லட்சம் மரக் கன்றுகள் நடப்படுகின்றன.  அது மட்டுமின்றி சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதற்கான மரம் நடும் திட்டமும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஏ.காமராஜ், வெல்லமண்டி நடராஜன், உதயகுமார், கே.சி.கருப்பண்ணன், விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.