மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணைக் கோரி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணைக் கோரி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புதன்கிழமை, மார்ச் 01, 2017,

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசின் நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையில் வரும் மார்ச் 8-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கவர்னர், மத்திய அமைச்சர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காததால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில், சசிகலா தரப்புக்கு எதிராக களமிறங்கியுள்ள முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சசிகலா எங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொது மக்கள் பலரும் எண்ணுகிறார்கள் என்று கூறினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு போயஸ்கார்டனில் நடந்தது என்ன? இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

ஆனால், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் அணி தோல்வியடைந்தது. தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னணி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பல்வேறு ஆலோசனை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி பன்னீர் செல்வம் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது : ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், தற்போதைய அரசு இதற்காக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதிமுகவின் தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 10,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.