மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 18 , 2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், அவர் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கடந்த டிசம்பர் 5 ம்தேதி தன் இன்னுயிரை நீத்தார். பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன, விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அந்த நீதிபதியின் பெயர் பின்னர் வெளியிடப்படும். குறுகிய காலத்தில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறுமுறை திறம்பட பணியாற்றி., தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலாக அயராது பாடுபட்ட உன்னத தலைவராய் ஜெயலலிதா அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புகளையும் நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் அவர் சிறப்பாக வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.