மழையினால் பழுதடைந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்கள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் ஆலோசனைப்படி யமஹா, ஐஷர் நிறுவனங்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

மழையினால் பழுதடைந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்கள்  ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் ஆலோசனைப்படி யமஹா, ஐஷர் நிறுவனங்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

செவ்வாய், டிசம்பர் 22,2015,

தமிழகத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கி பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களின் உரிமையாளர்கள், எவ்வித கட்டணமும் இன்றி பழுது நீக்கிக் கொள்ள வசதியாக, யமஹா, ஐசர் நிறுவனங்கள் பழுதுநீக்கும் சேவையின் கால அளவை நீட்டித்துள்ளன.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக, வெள்ளத்தில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை, எவ்விதக் கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருந்தார். அதனை ஏற்று, டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தரமுன்வந்துள்ளதாக முதலமைச்சர்  ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றை பழுது பார்க்கும் சிறப்பு முகாம்கள் கடந்த 12ம் தேதி தொடங்கி, நேற்றுவரை 10 நாட்கள் நடைபெற்றன.

இதன் காரணமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது, இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை இலவசமாக பழுது நீக்கி பயனடைந்தனர். இதனிடையே, பழுதடைந்த வாகனங்களின் வரத்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, யமஹா மற்றும் ஐசர் நிறுவனங்கள் வரும் ஜனவரி 31ம் தேதி வரை வாகனங்கள் பழுதுநீக்கும் சேவையை நீட்டித்துள்ளன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.