மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும், நாளை முதல் 17-ம் தேதி வரை மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அனுப்பிவைத்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்களும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும், தொடர்ந்து அந்த மாவட்டங்களிலேயே தங்கியிருந்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தாம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், அதனடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரிகள், பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகள், வீடுகள் சேதம் மற்றும் இதர சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி ஆணையிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பெருமழையின் காரணமாக ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மிக அதிக அளவு மழை பொழியும் போது அதன் காரணமாக ஏற்படும் சேதங்கள் தவிர்க்க இயலாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு சேதங்கள் ஏற்படும் போது துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதே சிறந்த அரசின் இலக்கணமாகும்;

அந்த வகையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தக்கவாறு நடைபெற்று வருகின்றன;

கடலூர் மாவட்டத்தில், கடந்த 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதி ஆகிய நாட்களில் மிக அதிக அளவிலான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினை தாம் உடனடியாக அனுப்பி வைத்ததாகவும், கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பற்றி தாம் ஏற்கெனவே கடந்த 11-ம் தேதி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரடி பார்வையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், 683 கிராம ஊராட்சிகளில், 635 கிராம ஊராட்சிகளுக்கு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது;

மின் விநியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது;

அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது;

பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த வடலூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையும் தற்போது போக்குவரத்துக்கு உகந்ததாக சீர்செய்யப்பட்டுள்ளது;

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது;

இன்றுவரை, 11,407 குடிசைகள் முழுமையாகவும், 53,149 குடிசைகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது;

குடிசைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 40 மருத்துவ முகாம்கள் மூலம் 8,885 நபர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது;

121 சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு 20,743 கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 3,335 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது;

73 டன் கால்நடைத் தீவனம் விலை ஏதுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளது;

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கடந்த 12-ம் தேதி இரவு முதல் மிக அதிக அளவில் கன மழை பொழிந்துள்ளது;

சென்னையில், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மாநகராட்சி பணியாளர்களால் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது;

83,000 உணவுப் பொட்டலங்கள் மாநகராட்சி மூலமாக வழங்கப்பட்டுள்ளன;

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;

26 முகாம்களில், 7,294 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்;

மேலும், மீட்புப் பணிகளுக்காக 5 மிதவை படகுகளுடன் கூடிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் 35 நபர்கள் கொண்ட ஒரு குழு, மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 நபர்கள் கொண்ட ஒரு குழு, கடலோர காவல் படையினைச் சார்ந்த 21 அதிரடிப் படை வீரர்கள் கொண்ட ஒரு குழு மீட்புப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர்;

மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. க. இராஜராமன், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்;

திருவள்ளூர் மாவட்டத்தில், 20 முகாம்களில், 1,620 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது;

அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட 5,500 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. எஸ்.கே. பிரபாகர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், எதிர்வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள் மாவட்டங்களிலும் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது;

இதர கடலோர மாவட்டங்களிலும் பெருமழை பெய்யக்கூடும் – தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு தாம் அனுப்பிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு திருமதி. த. சபீதா, விழுப்புரம் மாவட்டத்திற்கு திரு. த. உதயசந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திரு. சிவ் தாஸ் மீனா, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முனைவர் ச.விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு முனைவர் திரு கொ.சத்யகோபால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரு. சி. சமயமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரு. குமார் ஜயந்த், திருநெல்வேலி மாவட்டத்திற்கு முனைவர் ச. செந்தில்குமார், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திரு. அதுல் ஆனந்த் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள திரு. ககன்தீப் சிங் பேடி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரு. க. ராஜாராமன், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திரு.எஸ்.கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திரு. பிரதீப் யாதவ், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ள திரு. ராஜேஷ் லக்கானி ஆகியோர் அந்தந்த மாவட்டங்களிலேயே ஒருங்கிணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் இந்த மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்டங்களிலேயே இருந்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.