மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், டிசம்பர் 15,2015,

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது ஏழை, எளியவர்கள்தான். அவர்கள் தங்கள் குடிசைகளையும் வசிப்பிடங்களையும், குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது.

பேரிடர் நிவாரணத் தொகையில் இருந்து இல்லாமல், அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் மறுவாழ்வுக்கோ அல்லது அவர்களின் வசிப்பிடத்தை மறுபடியும் கட்டுவதற்கோ அது போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு நிலைத்த வீடு கட்டித்தருவதற்குத்தான் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.எனவேதான், சமீபகாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குடிசைகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என்று நான் அறிவித்தேன். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் ஓரத்தில் வசித்தவர்கள் என்று 50 ஆயிரம் குடும்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் இனிமேலும் அதுபோன்ற ஆபத்தான இடங்களில் வசிக்கக்கூடாது என்பதால், அவர்களுக்கு மாற்று வசிப்பிடம் கொடுப்பது அவசியமாகிறது. மேலும், சென்னை நகருக்குள் ஓடும் அந்த நீர்வழிகளை பாதுகாப்பதும் அவசியமாகிறது.

இந்த 50 ஆயிரம் குடும்பங்களில் 25 ஆயிரம் குடும்பங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியிருக்கச் செய்வதற்கு அரசால் முடியும். இவர்களுக்கான மறுவாழ்வுப் பணி இன்னும் 2 வாரங்களுக்குள் தொடங்கிவிடும். ஓர் ஆண்டுக்குள் படிப்படியாக இந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும். அதுவரை அவர்களுக்கு அரசின் செலவில் தற்காலிக வசிப்பிடம் தரப்படும்.

பக்கிங்காம் கால்வாயின் ஓரம் வசிக்கும் மற்ற 25 ஆயிரம் குடும்பங்கள், சென்னையிலும், வெளியிடங்களில் ஓடும் நீர்நிலைகளின் ஓரத்திலும் வசிக்கும் வேறு 25 ஆயிரம் குடும்பங்கள் ஆகியோருக்காக அரசு நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு நாங்கள் திட்டம் தயாரித்து உள்ளோம்.

சிறப்பு திட்டம்;

அதன்படி, எல்லா வசதிகளுடனும் கூடிய 380 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை கட்டுவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் சிறப்பு வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு ஆகும். எனவே நகர்ப்புற ஏழை மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டும் இந்த சிறப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை மற்றும் புறநகரங் களில் நிலத்தின் விலை கணிசமாக உள்ளது. அதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். ஏற்கனவே உள்ள வீடு கட்டும் திட்டத்தின்படி, பயனாளிகள் தரப்பில் இருந்து ஒரு தொகை பெறப்படுவது வழக்கம். ஆனால் தற்போதுள்ள பயனாளிகளிடம் இருந்து பங்களிப்பை பெற முடியாது.எனவே இதற்கான சிறப்பு திட்டம் அனுமதிக்கப்படுவது அவசியமாக உள்ளது. அதிலும், மத்திய அரசின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதோடு, நீர்நிலைகளின் அருகே குடிசைப் பகுதியில் வசித்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர் களை வேறிடத்துக்கு மாற்றத் தேவையில்லை. ஆனால் ஏற்கனவே மத்திய அரசிடம் இருக்கும் திட்டத்தின்படி, அவர்களுக்கு அங்கேயே வீட்டை கட்டித் தரலாம். இதற்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் தொகை வழங்குவதாக அறிகிறேன்.

இதுபோல் பாதிக்கப்பட்ட வீடுகள் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நகர்ப்புறங்களிலும் 50 ஆயிரம் வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுமானத்துக்காக ரூ.750 கோடியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இந்த வீடுகள் கட்டுமானத்துக்கு தமிழக அரசு தனது பங்களிப்பாக தலா ஒரு லட்சம் வழங்கும். எனவே ஒரு வீட்டுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் நிதி கிடைக்கும்.

கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சம் குடிசைகள் பகுதியாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கும் ஊரகப் பகுதியில் ஒரு நிரந்தர வீட்டை ‘இந்திரா அவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்கான தொகையை ஒரு வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்று சிறப்பு ஒதுக்கீடாக மேம்படுத்தவேண்டும். இந்த ஒரு லட்சம் வீட்டுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

எனவே, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறையை அறிவுறுத்தி, கூடுதல் சிறப்பு நிதியை உடனடியாக அனுமதிக்க உத்தரவிட்டால், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி வீடு கட்டித்தர முடியும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.