மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்க வேண்டும்,அதிகார மையமாக மத்திய அரசு செயல்படக் கூடாது : டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்க வேண்டும்,அதிகார மையமாக மத்திய அரசு செயல்படக் கூடாது : டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஜூலை 17,2016,

மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையம் போல செயல்படாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் (ஐஎஸ்சி) பதினோறாவது கூட்டம் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு முதல்வரின் உரையை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:

சம்பிரதாயக் கூட்டமா? அரசியல், நிர்வாகம், பொருளாதார ரீதியில் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்த போதிலும், அதற்குத் தக்கபடி மத்திய – மாநில அரசுகளின் தன்மையில் மாற்றம் செய்யப்படவில்லை. வரிகள் சார்ந்த வளர்ச்சியை நம்பும் மத்திய அரசு, சீரான சட்டம் என்ற பெயரில், அரசியலமைப்பில் மாநிலங்கள் பட்டியலில் உள்ள விஷயங்களை தனது வரம்புக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால், பொது அமைதி – பராமரிப்பு அதிகாரத்தை மத்திய அரசால் திரும்பப் பெற முடியவில்லை. எனவே, மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையம் போல மத்திய அரசு செயல்படக்கூடாது.

மாநிலங்களிடையிலான கவுன்சில் கூட்டம் என்பது விவாதங்கள் நடத்தி பல பயனுள்ள கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கான அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, சம்பிரதாயமாக கூட்டம் நடத்தி கருத்து கேட்டு விட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்காத கூட்டமாக அமையக் கூடாது.

புன்சி பரிந்துரைகளுக்கு ஆதரவு: மத்திய – மாநில உறவுகள் தொடர்பாக 2007-இல் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.எம். புன்சி ஆணையம், 2010-இல் அளித்த அறிக்கையின் பெரும்பான்மையான பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவை.

ஆரம்பத்தில் மாநிலங்கள் பட்டியலில் இருந்த “கல்வி’, தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீண்டும் மாநிலங்கள் பட்டியலிலேயே சேர்க்க வேண்டும்.

வெளிநாடுகளுடன் மத்திய அரசு நிதி முதலீட்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளும் போது, அதன் மூலம் மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதையொட்டி, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்ய மத்திய நிதியமைச்சகம் முன்மொழிந்துள்ள வரைவுக் குறிப்புகளின் சில அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை.

ஆளுநர்கள் நியமனம்: ஆளுநருக்கு ஐந்து ஆண்டுகால பதவிக் காலத்தை நிர்ணயிக்க வேண்டும். இடையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவரை நீக்க முடியும். குடியரசுத் தலைவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஆளுநரை நீக்கக் கூடாது. அதுபோல, மாநில அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்கும் போது, அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என்ற புன்சி ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஆதரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அரசியலமைப்பின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆளுநர்கள் தங்கள் ஆளுமையை நிலைநாட்டும் நோக்குடன் கலைக்காமல், மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாக் நீரிணையில் இலங்கைக் கடற்படையால் தமிழகக் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், புன்சி ஆணையம் அளித்துள்ள இது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

மாநிலங்களவை அவசியம்: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநிலங்களவை முட்டுக்கட்டை போடுவதால் அது அவசியமா என்ற கருத்து எழுந்துள்ளது. கூட்டாட்சி முறையில் “மாநிலங்களவை’ அவசியமானது. ஆனால், மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களவையில் இடங்கள் சமமாக இருக்க வேண்டும் என்ற புன்சி ஆணைய பரிந்துரையை தமிழக அரசு ஆதரிக்கவில்லை. மாநிலங்களவை தற்போதுள்ளபடியே இருக்க வேண்டும்.

புன்சி ஆணைய பரிந்துரைகளான, மத்திய – மாநில அளவிலான நீதித் துறை கவுன்சில் அமைப்பது; மத்திய சட்டங்களை அமல்படுத்தும் போது விதிக்கப்படும் செஸ் முறையை நீக்குவது; சரக்கு, சேவை வரிகள் முறையால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் இழப்பை 100 சதவீதம் வழங்குதல்; கிராமப்புற உள்ளாட்சி முறையை கிராம பஞ்சாயத்து, வட்டார அல்லது மாவட்ட அளவில் உருவாக்கி அதன் கட்டுப்பாட்டை மாநிலங்களிடம் விடுதல்; மாநில காவல் துறை நவீனமயமாக்கலுக்கான நிதி, திட்டங்களை அதிகரித்தல் போன்றவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.