மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,27 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து எளிதில் வெளியிடங்களுக்கு சென்று வர ஏதுவாக 2016 – 2017-ம் நிதியாண்டிற்கு 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,017 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒளிரும் மடக்குக் குச்சிகளுக்கு மாற்றாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிக தூரத்தில் உள்ள பொருட்களையும் அதிர்வு மூலம் உணர்ந்து தங்கு தடையின்றி பயணிக்க ஏதுவாக 1 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 5000 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவீன ஒளிரும்மடக்கு குச்சிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிடும் திட்டத்தின் மூலம் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதோடு, மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பெற்று பயன்பெற முடியும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தினை, தமிழ்நாட்டில் துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.சரோஜா, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முகமது நசிமுத்தின், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.