மின்துறையில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் சரி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக ஒளிருகிறது : முதல்வர் ஜெயலலிதா

மின்துறையில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் சரி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக ஒளிருகிறது : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஆகஸ்ட் 04,2016,

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உயர்ந்துள்ளதை மத்திய அரசே திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.மேலும், தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட மின்சாரத்துறையை சரி செய்தது தமது தலைமையிலான அ.தி.மு.க.அரசு என முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சட்டசபையில் நேற்று  எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் ரங்கநாதன் பேசினார். அவர் பேசும்போது, மின் துறையில் தமிழகம் உபரி மின் உற்பத்தி செய்யும் மாநிலம் என்று ஒரு மாயத் தோற்றத்தை எற்படுத்தி இருக்கிறீர்கள் என்று பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா அவைக்குள் வந்தார். வந்ததும், தி.மு.க. உறுப்பினர் ரங்கராஜனுக்கு பதில் அளிக்கும் வகையில் குறுக்கிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது.,

நான் உள்ளே வந்து கொண்டிருந்தபோது, உறுப்பினர் பேசுகையில், தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றொரு மாயத் தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என்றார். அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என்ற சொற்றொடரை திரும்பத் திரும்ப சொன்னார். நாங்கள் அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. மத்திய மின்சாரக் குழுமம் தனது அறிக்கையில், தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் உபரி மாநிலம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இது, இந்தியாவிலுள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை எல்லாம் எங்களது ஆட்சிக் காலத்தில் போடப்பட்டதாக அவர் சொல்லுகின்றபோது, கால்பந்து விளையாடத் தெரியாத ஒருவர், திரும்பத் திரும்ப Same side goal அடிப்பது போல் இருக்கிறது என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதை தொடர்ந்து உறுப்பினர் ரங்கநாதன்  அதே புகார் தெரிவித்து பேசினார். அப்போது முதல்வர் மீண்டும் குறுக்கிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது.,

உறுப்பினர் ப. ரங்கநாதன் கொள்கை விளக்கக் குறிப்பை படித்திருந்தால், தமிழ்நாடு மின்மிகை மாநிலமா, இல்லையா என்ற குழப்பம் அவருக்கு வந்திருக்காது. கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 3 மற்றும் 4-ஐ இப்போது நான் படிக்கிறேன். இது இன்றைக்கு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு.

2010–ம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைய மின்சார பயனீடு 200 மில்லியன் யூனிட் அளவாக இருந்தது. தற்போது 2016-ம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட் அளவாக உயர்ந்துள்ளது. மேலும், 29.-4.-2016 அன்று தமிழ்நாடு உச்சகட்ட மின் தேவையான 15,343 மெகா வாட் அளவையும் மற்றும் உச்ச மின் பயனீட்டளவான 345.617 மில்லியன் யூனிட் பூர்த்தி செய்தது. இதுதவிர, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டு மின் தேவை, மின் உற்பத்தி சமன்பாட்டு அறிக்கையில் 2016–-2017–ம் ஆண்டில் தமிழகம் 11,649 மில்லியன் யூனிட் அளவிற்கு கூடுதலாக உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக திகழும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி இருந்தபோது மின்சாரத் துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்து மின்சாரத் துறையையே குட்டிச் சுவராக்கினார்கள். அவர்கள் செய்தது எல்லாம் தவறு. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 2011 முதல் 2016 வரை தி.மு.க செய்த தவறுகளையெல்லாம் சரி செய்தோம். இருட்டில் மூழ்கியிருந்த தமிழ்நாட்டை நாங்கள் ஒளிபெறச் செய்தோம். ஒளிமயமான மாநிலம் ஆக்கினோம். இன்றையதினம் மின்சாரத் துறை சம்பந்தமாக அவர்கள் என்ன குற்றச்சாட்டு சொல்லவேண்டுமென்று நினைத்தாலும், என்ன பழி போட வேண்டுமென்று நினைத்தாலும், அது நடக்கவில்லை ஏன் என்றால் தவறு முழுவதும் அவர்கள் பக்கம் இருக்கிறது. சரி செய்த சாதனைகள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறது. அதனால் எல்லாவற்றிற்கும் மின்சாரத் துறை அமைச்சர் சரியான, திட்டவட்டமான பதில்களைத் தருவதால், சரியான பதிலடி ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதால் அதற்குமேல் இங்கே இருக்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்தேன் அதற்கு தகுந்தபடி அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்கள்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். மேலும், தமிழகம் மின் மிகை மாநிலம் என்பதை புள்ளி விவர ஆதாரங்களுடன் முதல்வர் ஜெயலலிதா விளக்கி உரையாற்றினார்.

எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே அதாவது 2001–2006ம் ஆண்டு ஆட்சி காலத்திலேயே வல்லூரில் 1,500 மெகாவாட், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட், சிறு புனல் மின் திட்டங்கள் மூலம் 36 மெகாவாட் என மொத்தம் 3,136 மெகாவாட் அளவிற்கான மின்சார உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன.

ஆனால், தங்களது சுயநலத்துக்காக இந்த திட்டங்களை எல்லாம் முந்தைய தி.மு.க அரசு விரைந்து முடிக்கவில்லை. அதிக விலையிலான மின்சாரத்தை தனியாரிடமிருந்தும், மின் பரிமாற்றத்திலிருந்தும் வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டங்கள் எல்லாம் தாமதப்படுத்தப்பட்டன. 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பின் பல்வேறு மின் திட்டப் பணிகளை விரைந்து முடித்ததோடு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அதற்கான மின்வழித் தடம் வேண்டும். வட மாநிலங்களிலுள்ள மின்சாரத்தை இங்கே பெறுவதற்கு வகை செய்யும் விதமாக மின்வழித் தடங்கள் அமைத்திட அ.தி.மு.க அரசு வலியுறுத்தியதன் காரணமாகவே மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து திருவலம் இடையேயும் மற்றும் நரேந்திரா–கோலாப்பூர் இடையே 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின்வழித் தடங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாம் மின்சாரம் பெற முடிகிறது. இங்கே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மத்திய அரசு திட்டங்களிலிருந்து நமக்கான பங்கு ஆகியவற்றின் மூலம் 4,455.5 மெகாவாட் மற்றும் நீண்ட கால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலம் 3,030 மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் 947 மெகாவாட் என மொத்தம் 8,432.5 மெகாவாட் மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக நாம் பெற்று வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.