மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி பதவி ஏற்கிறார்

மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா  23–ந்தேதி பதவி ஏற்கிறார்

வெள்ளி, மே 20,2016,

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. 1984–க்கு பிறகு ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததில்லை என்ற நிலையை மாற்றி, மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றது.

இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெற்றியை அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் எங்கும் வெடி வெடித்து கொண்டாடினர்.

மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் அ.தி.மு.க. வெற்றி குறித்து குறிப்பிடும்போது, ‘என்றென்றும் மக்கள் தொண்டில் என் வாழ்வை கழிப்பேன், மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் எனது பணி இருக்கும்’ என்று கூறினார்.

23–ந் தேதி பதவி ஏற்பு

14–வது சட்டசபை தொடர்ந்து 15–வது சட்டசபையை ஜெயலலிதா அமைக்க உள்ளார். மீண்டும் முதல்–அமைச்சராக வரும் 23–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் அவர் பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மற்றும் மத்தியமந்திரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்

இதற்கு முன்பாக, அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓரிரு நாளில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கப்பட உள்ளது.