முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு  தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய், மே 24,2016,

முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.
 இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 வாழ்த்துக் கடிதங்கள்: உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மீண்டும் நல்லாட்சி புரிய வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
 இதேபோல், கர்நாடக மாநில பாஜக தலைவரும், மக்களவை உறுப்பினருமான பி.எஸ்.எடியூரப்பா அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், “அபார வெற்றி பெற்று ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நிர்வாகத் திறமையாலும், அரசின் சிறப்புத் திட்டங்களாலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன். தங்களது பதவிக் காலம் வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், கடின உழைப்பு தங்களின் அரசியல் வாழ்வில் சிறப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தனக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.