முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தடையில்லை : ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தடையில்லை : ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

புதன், மார்ச் 23,2016,

முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு புதிய அட்டைகள் வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கான அட்டைகள் வழங்கப்பட்டு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும் புதிய அட்டைகள் வழங்க தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியது. அரசியல் கட்சித்தலைவர்களும் புதிய அட்டைகள் வழங்குவதில் தடை செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-  முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான புதிய அட்டை வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மேலும் தமிழ்நாடு மருந்து கொள்முதல் கழகம் மூலம் தேவையான மருந்துகளை கொள்முதல் செய்துகொள்ளவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.