முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

வியாழன் , மார்ச் 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்குவதன் மூலம் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மேயர் ராஜன்செல்லப்பா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் நீதிபதி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பூமா.ராஜா வரவேற்றுப் பேசினார். ஒன்றிய தலைவர்கள் பால்பாண்டி (உசிலம்பட்டி), பவளக்கொடி ராசுக்களை (செல்லம்பட்டி), முனியம்மாள் பிச்சைமணி (சேடபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

உசிலம்பட்டி தொகுதியில் 320 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கமிட்டியிலும் 20 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன் வாயிலாக 6,400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உசிலம்பட்டி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண்டல கமிட்டியில் 11 பேர் தலைமையில் 3,400 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்த கமிட்டியில் உள்ள அனைவரும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து வீடு விடாக சென்று எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

வெற்றியை தடுக்க முடியாது

பெண்களுக்கான திட்டங்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகள், விலையில்லா பொருட்கள், ரொக்கப்பணத்துடன் தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம், விவசாயிகளுக்கான மேம்பாட்டு திட்டங்கள், கூட்டுறவு கடன்கள் என எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி தந்துள்ளார். இவை அனைத்தையும் விளக்கி ஒவ்வொருவரும் அயராது உழைத்து வாக்கு சேகரித்தால் அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவசி, பாண்டியம்மாள் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் துரை.தனராஜன், மாவட்ட விவசாய அணி செயலளர் வேலுச்சாமி, தலைவர் டிக்கா சேதுராமன், உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் பஞ்சம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் பண்பாளன், போத்திராஜா, சுமதி, சேடபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரிராஜேந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட துணை மற்றும் இணைச்செயலாளர்கள், ஒன்றிய, நகர் நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.