முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடிவடிக்கைகளால் உபரி மின்சாரத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

வெள்ளி, ஜூலை 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரம் கிடைக்கும் என மத்திய மின்சார ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் கிடைப்பது வரும் செப்டம்பர் மாதம் குறைந்தபோதிலும் தமிழகத்தின் உபரி மின்சாரம் குறையாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மின்சார ஆணையகமான CEA வருடாந்திர மின்சார தேவை மற்றும் விநியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிக உபரி மின்சாரம் நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்சார தேவை நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் யூனிட்டாக உள்ள நிலையில், விநியோகிக்கப்படும் மின்சாரம் 1.15 லட்சம் யூனிட்டாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டில் 11,649 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உபரியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மின்பற்றாக்குறை இருந்த நிலையில், தமிழக அரசு புதிய மின்சார உற்பத்தி நிலையங்களை தொடங்கியதாலும், வெளிச்சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கியதாலும், இந்தப் பற்றாக்குறை நிலை மாறி, உபரி மின்சாரம் கிடைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை 6 புள்ளி ஏழு ஒன்று சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் குறைந்துவிட்டாலும் கூட தமிழகத்தின் மின்உபரி நிலை தொடர்ந்து இதே அளவில் நீடிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கூடங்குளம் அணுமின்நிலைய 2-வது அலகில் இருந்து தமிழ்நாட்டிற்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

வெளிமாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து 2,200 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட போதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டுவர கம்பி பாதைகள் இல்லாததால், முழு அளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு இடையே 2 மின்பாதைகள் தொடங்கப்பட்டுள்ளதால், முழு அளவு மின்சாரம் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.

மின்துறையில் முதலிடம் வகிக்கும் தமிழகம் சூரியஒளி மின்சாரம் மூலம் 900 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமும், சூரிய ஒளி மூலமும் பெறப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். மொத்தத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக மின்வாரிய அதிகாரி குறிப்பிட்டார்.