முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

சனி, ஜூலை 16,2016,

துபாய் அஜ்மனில் பல்வேறு பொய்யான காரணங்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழகம் திரும்பினர். சென்னை வந்த 12 மீனவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் திரு.D. ஜெயக்குமார் வரவேற்றார்.  பின்னர் மீனவர்கள், தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் என்ற இடத்தில் இருந்து 2 விசைப் படகுகளில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள், அரேபியமீனவர்கள் 2 என 25 பேர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தனர். அப்போது, அரேபிய மீனவர் கமீஸ் என்பவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். இந்த நிகழ்வு தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அவர்களை குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்தது. ஆனால் அந்த மீனவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல், அவர்களின் பாஸ்போர்ட்களை ஒப்படைக்காமல், ஒப்பந்ததாரர்கள் மீனவர்களை வீட்டுக் காவலில் வைத்து, கொடுமைப்படுத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பாவி தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அஜ்மனில் இருந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 23 விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 11 மீனவர்கள் ஏற்கனவே கடந்த 12-ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத் துறை அமைச்சர் திரு.D. ஜெயக்குமார் வரவேற்று உணவு, உடை உள்ளிட்டவற்றை அளித்து அரசு செலவில் தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக எஞ்சியிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரும் அஜ்மனில் இருந்து, நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். மீன்வளத் துறை அமைச்சர் திரு.D. ஜெயக்குமார் மற்றும் மீன்வளத் துறை உயரதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவற்றை அளித்து அரசு செலவில் தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

தங்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாயகம் திரும்பிய மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.