முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வெங்கையா நாயுடு, நாராயணசாமி,ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வெங்கையா நாயுடு,  நாராயணசாமி,ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு

திங்கள், அக்டோபர் 10,2016, 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 18–வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் நலம் விசாரித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவ மனைக்கு நேரில் வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு  கூறுகையில், முதலமைச்சர் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்தேன். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் விவரித்தார்கள். அவருடைய உடல்நிலை தேறிவருவதாகவும் தெரிவித்தனர்.சிகிச்சைக்கு முதலமைச்சர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.. அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களுக்கு சேவையாற்ற அவர் மீண்டு வருவார்  என்று கூறினார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் விசாரித்தோம். அவர்கள் முதலமைச்சரின் உடல்நலம் தேறிவருவதாக தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயர் மருத்துவர் ஒருவரிடமும் பேசினேன். அவர்கள் முதலமைச்சரின் உடல்நிலை தேறிவருவதாக தெரிவித்தனர்.

அவர் விரைவில் பூரண குணமடைந்து எப்போதும் போல் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய சார்பிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக முதலமைச்சரின் உடல்நலம் குறித்து. மருத்துவமனை இயக்குனர், முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்தேன். அவர்களிடம் முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன்.

அவர்கள் முதலமைச்சர் நல்ல உடல்நலம் பெற்றுவருவதாக தெரிவித்தனர். முதலமைச்சர் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.