முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் கேட்ட தி.மு.க. கூட்டுறவு சங்க தலைவர்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் கேட்ட தி.மு.க. கூட்டுறவு சங்க தலைவர்

செவ்வாய், மே 31,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடியைப் பெற விவசாயிகளிடம் 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக, தி.மு.க.வைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தாம் வெளியிட்ட அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். மேலும், பதவியேற்ற முதல் நாளே, தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்துகையெழுத்திட்டது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ள மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பெருமாள் என்பவர், விவசாயிகள் கடன் தள்ளுபடி பெற, 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விவசாயிகள், பெருமாள் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இந்தப் புகார் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.