முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

புதன், செப்டம்பர் 28,2016,

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில், அடுத்த மாதம் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பெயர்களை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில், 15 வார்டுகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் 9-வது மண்டலத்தைச் சேர்ந்த 18 வார்டுகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், மனுதாக்கல் செய்தனர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சியில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகங்களில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், வேப்பந்தட்டை உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் நாகை, வேதாரண்யம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் மனுதாக்கல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 18 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, வெண்ணந்தூர், நாமகிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய, 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய, 23 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியின் 17 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாகச் சென்று மனுத்தாக்கல் செய்தனர்.

இதேபோல் வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, சிவகங்கை, திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, கடலூர், தருமபுரி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் கழக வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கழகத்தின் பெண் வேட்பாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.