முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்:அன்வர்ராஜா எம்.பி. பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்:அன்வர்ராஜா எம்.பி. பேச்சு

புதன்கிழமை , ஜனவரி 27, 2016,

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி சாதனை படைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் அன்வர்ராஜா எம்.பி. பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட பனைக்குளம், புதுவலசை, தேர்போகி உள்பட பல்வேறு பகுதிகளில் அன்வர்ராஜா எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பனைக்குளம் மற்றும் தேர்போகியில் ஊராட்சி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு புதுவலசை ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி தலைவர் சலீனாபானு, ஊராட்சி கழக செயலாளர் ஜபருல்லாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்வர்ராஜா எம்.பி. கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா 37 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 48 பேரையும் அழைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற உத்தரவிட்டுஉள்ளார். இதன்படி அனைத்து எம்.பி.க்களும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நடத்திய மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுஉள்ளது. குறிப்பாக சாலை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோப்பேரிமடம் முதல் தாமரையூருணி வரை 11 கிலோ மீட்டர் சாலை ரூ.14 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல அழகன்குளம் முதல் ஆற்றங்கரை வரையிலான சாலை பணிகள் ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. நதிப்பாலம் சாலை பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சராக திகழ்கிறார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். அது சாத்தியம் இல்லை என்றும், கொடுக்க முடியாது என்றும் கருணாநிதி பேசினார். இதேபோல ஆடு, கறவை மாடுகள் கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்த போதும், அது சாத்தியமில்லை என்று கருணாநிதி கூறினார். ஆனால் இவைகள் அனைத்தையும் செய்து காட்டியுள்ளார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. மேலும் ஏழை மக்களுக்காக அம்மா உணவகத்தை தொடங்கி குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறார். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும். தற்போது பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், தலைமை கழக பேச்சாளர் மைதீன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரன், பெருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.